வேலூர்: சட்டப்பூர்வ தத்தெடுப்பு கட்டமைப்பை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலாளர் ராகவ் லங்கர் அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) கீழ் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளும் சிறார் சட்டம் தொடர்பான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக, மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவத்துறை, குழந்தைகள் நலத்துறை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அனைத்து மருத்துவக்கல்லூரிநிர்வாகங்களும், சிறார் சட்ட நெறிமுறைகள் குறித்து பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும். மருத்துவக்கல்லூரிகள் அங்கீகரிக்கப்படாத தத்தெடுப்புகளை தடுக்கவும், குழந்தை கடத்தல் மற்றும் குழந்தை சுரண்டல் அபாயங்களை நீக்க, குழந்தைகளின் உரிமைகள், குழந்தை நலனை பாதுகாக்க தேவையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அனைத்து பணியாளர்கள், குறிப்பாக மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், குழந்தைகள் மருத்துவதுறையைச் சேர்ந்தவர்கள், சிறார் சட்டவிதிகள் குறித்து கட்டாயம் பயிற்சி பெற வேண்டும். கைவிடப்பட்ட அல்லது மருத்துவமனைகளில் ஒப்படைக்கப்பட்ட குழந்தை குறித்த தகவல்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு மூலம், குழந்தைகள் நலக்குழுவிற்கு தெரிவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தனிநபர் அல்லது குடும்பத்தினரால் ஒரு குழந்தையை தத்தெடுப்பதற்கு நேரடியாக உதவ வேண்டும். அனைத்து மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் குழந்தை தத்தெடுப்புக்கான சட்ட நடைமுறைகள் மற்றும் சட்டவிரோத குழந்தை தத்தெடுப்புகளின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு போஸ்டர்களை காட்சிப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன்களை பாதுகாப்பது அவசியம். சட்டப்பூர்வ தத்தெடுப்பு கட்டமைப்பை கண்டிப்பாக பின்பற்று வதை உறுதிசெய்ய வேண்டும்.
கைவிடப்பட்ட குழந்தையை கண்டறிந்தாலோ அல்லது கைவிடப்பட்ட குழந்தை குறித்த தகவல் தெரிந்தாலோ தனிநபர், மருத்துவமனை நிர்வாகங்கள் உட்பட அனைவரும் குழந்தை உதவி மையம், காவல்துறை, குழந்தைகள் நலக்குழுவிற்கு தாமதமின்றி புகார் அளிக்க வேண்டும். பெற்றோர் தங்களுடைய குழந்தையை ஒப்படைக்க விரும்பினால், மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக குழந்தைகள் நலக்குழுவிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குழந்தைகளை விற்பனை செய்தல் சட்டவிரோதமாக குழந்தையை மாற்றுவது குற்றமாகும். முதியோர் இல்லம், மகப்பேறு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்கள் இந்த செயல்களில் ஈடுபட்டால், அவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறை தண்டனை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன்களை பாதுகாப்பது அவசியம்: தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.