
மதுரை,
கடந்த மாதம் அ.தி.மு.க. பிரமுகர்கள் மதுரை மாநகராட்சி பகுதிகளில் அ.தி.மு.க. கொடிக் கம்பங்கள் நடுவதற்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி இளந்திரையன், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை ஓரங்களில் கொடிக்கம்பங்கள் வைக்கக்கூடாது.
கொடிக் கம்பங்களை வைப்பதால் விபத்து மற்றும் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே ஏப்ரல் மாதத்திற்குள் கொடிக் கம்பங்களை தமிழக அரசு முற்றிலும் அகற்ற வேண்டும். அகற்றாத பட்சத்தில் கொடிக் கம்பங்களை அகற்றி அதற்கான செலவை அந்தந்த அரசியல் கட்சி பிரமுகர்களிடமே பெற்று கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மதுரையை சேர்ந்த அமாவாசை என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான அந்த மனுவில், அரசியல் கட்சி கொடிக் கம்பங்கள் நடுவது ஜனநாயக கடமை. தங்கள் கட்சிகள் பற்றி மக்கள் மத்தியில் கொண்டு செல்லவே கொடிக் கம்பங்கள் நடப்படுகின்றன. எனவே தனி நீதிபதி உத்தரவு தவறானது என்றும், அதனை ரத்து செய்து கொடிக் கம்பங்கள் நடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவானது நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், "அரசியல் கட்சியை சேர்ந்தவர்களோ, சாதி, மத அமைப்பினரோ அவர்களுக்கு சொந்தமான இடங்களில், அலுவலகங்களில் முறையாக அனுமதி பெற்று நிரந்தர கொடி கம்பங்களை வைத்துக் கொள்ளலாம். சாலைகளை பயன்படுத்த வேண்டாம். நெடுஞ்சாலைகளில் கட்சிக் கொடிகள், பிளக்ஸ் பேனர்கள், கொடிக் கம்பங்கள் வைக்க எந்த அனுமதியும் கிடையாது. மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் விஷயங்களில் ஜனநாயக உரிமையை கேட்க வேண்டாம்" என்று கூறினர்.
மேலும், தனி நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என்று நீதிபதிகள் அமர்வு கருத்து தெரிவித்தது. இதையடுத்து சாலையோரங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது.