சென்னை,
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். காலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெயில் அதிகரித்து காணப்பட்டது. பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்துதரப்படவில்லை என கூறப்படுகிறது.
வெயிலின் தாக்கத்தாலும், குடிநீர் கிடைக்காததாலும் உடலில் நீர்ச்சத்து குறைந்து 100-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் மட்டும் தற்போது சிகிச்சையில் உள்ளனர். மீதமுள்ளவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.