நாடு முழுவதும் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வெளிமாநிலங்களுக்கு செல்லும் வகையில் பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகள் நான்கு மற்றும் ஆறு வழிச் சாலைகளாக அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே வேலூர், ராணிபேட்டை, ஆம்பூர் வழியாகச் செல்லும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ராணிப்பேட்டை, சித்தூர் வழியாக செல்லும் சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆறு வழிச் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன.
இச்சாலைகளில் செல்லும் வாகனங்கள் குறைந்தபட்சம் 80 முதல் 100 கிலோ மீட்டரும், அதிகபட்சமாக 150 கிலோ மீட்டரும் வரையிலான வேகத்தில் செல்லும். இதனால் அதிக அளவு விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. விபத்துகளில் சிக்குவோர் 108 அல்லது 100 என்ற உதவி எண்களுக்குத் தகவல் தெரிவிக்கிறார்கள். அதன்பேரில் ஆம்புலன்ஸ் அல்லது மீட்பு வாகனங்கள் வரும். இதைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள ஆறு வழி தேசிய நெடுஞ்சாலைகளில் எஸ்ஓஎஸ் என்ற இலவச தொலைத் தொடர்பு கருவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 2 கிலோமீட்டர் தொலைவுக்கும் சாலையின் இருபுறமும் மஞ்சள் நிறத்தில் எஸ்ஓஎஸ் என்ற தகவல் தொடர்பு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு எஸ்ஓஎஸ் சாதனம் என மொத்தம் 144 சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மையக் கட்டுப்பாட்டு அறைகள் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் இயங்கும் விதத்தில் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள எஸ்ஓஎஸ் சாதனத்தின் முக்கியத்துவம் குறித்து வாகன ஓட்டிகளிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் அந்த கருவிகள் காட்சிப் பொருளாக மாறியது. மேலும் கருவிகள் செயல்படாமல் முடங்கி இருந்தது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் புதிய தகவல் தொழில்நுட்ப வசதியுடன் அதாவது வைபை வசதியுடன் கூடிய எஸ்ஓஎஸ் கருவிகள் அமைக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 4 மாவட்டங்களில் 144 இடங்களில் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையும் எல்என்டி நிறுவனமும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்பட்டால் ஆப்டிகல் பைபர் கேபிள் மூலம் அமைக்கப்பட்டுள்ள எஸ்ஓஎஸ் கருவியின் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் சிக்னல் மூலம் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவருக்கு தகவல் கிடைக்கும். இதையடுத்து சில நிமிடங்களிலேயே 108 ஆம்புலன்ஸ், போலீஸ் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள். எந்த எஸ்ஓஎஸ் கருவியில் இருந்து பேசுகிறோமோ, அந்த இடத்தை அறியும் வகையில் கட்டுப்பாட்டு அறையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் விபத்து நடந்த இடத்தைக் குறிப்பிட்டு சொல்லத் தேவையில்லை. இந்த கருவியை வாகன ஓட்டிகள் பெரும்பாலும் பயன்படுத்துவது இல்லை. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டுவது, சுரங்கபாதை போன்ற கட்டுமான பணிகள் காரணமாக கேபிள் துண்டிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் அந்த சமயத்தில் இந்த எஸ்ஓஎஸ் கருவி செயல்படாமல் போகும். இதை தவிர்க்கும் வகையில் தற்போது வைபை வசதியுடன் கூடிய எஸ்ஓஎஸ் கருவிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு கருவியும் தனித்தனி சிம்கார்டு மூலம் இயங்கும். மேலும் அந்த கருவியின்மேல் பகுதியில் சோலார் பேனல் அமைக்கப்படும். இதன்மூலம் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும். எப்போதும் எந்த நேரத்திலும் வாகன ஓட்டிகள் தொடர்பு கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் 144 இடங்களில் இந்த கருவிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் இது செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதனால் விபத்துகள் நடந்தாலும் உயிர்ச் சேதத்தை வெகுவாகக் குறைக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post விபத்து, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அவசர உதவிக்கு தேசிய நெடுஞ்சாலையில் வைபை வசதியுடன் எஸ்ஓஎஸ் கருவிகள்: பட்டனை அழுத்தினால் போதும் உடனே வரும் ஆம்புலன்ஸ், போலீஸ், மீட்பு குழு appeared first on Dinakaran.