*அங்கன்வாடி உதவியாளர் பணி வழங்க வேண்டுகோள்
நெல்லை : ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளை பராமரிக்க முடியாமல் தவித்துவரும் இளம்பெண், மனநிலை பாதிக்கப்பட்ட தனது கணவருடன் வாழ்வாதாரம் தேடி சத்துணவு மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணி வழங்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுதொடர்பாக மக்கள் குறை தீர்க்கும் நாளில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அவர் அளித்த மனு விவரம்: நெல்லை மாவட்டம் பத்தமடை பள்ளிவாசல் கீழமுதல் தெருவை சேர்ந்தவர் பிச்சையா.
இவரது மகள் இசக்கியம்மாள் என்ற உஷா (25). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவரது கணவர் பழனிநாதன், கூலி வேலை செய்து வருகிறார். இதனிடையே கடந்த 7-10-2020 அன்று தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 2 ஆண் மற்றும் 2 பெண் உள்பட 4 குழந்தைகள் பிறந்துள்ளது.
இந்நிலையில் ஒரு விபத்தில் அவரது கணவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கணவர் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் 4 குழந்தைகளையும் வைத்துக்கொண்டு வயதான பெற்றோருடன் சிரமத்துடன் குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலையில் இருந்து வருகிறேன்.
பிளஸ்2 வரை படித்துள்ளேன். எனது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டி எனக்கு சத்துணவு, அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்தில் பணி வழங்கி அரசு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
The post விபத்தில் மனநிலை பாதித்த கணவர் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பராமரிக்க தவிக்கும் இளம்பெண் appeared first on Dinakaran.