கடலூர், ஏப். 25: விபத்தில் இறந்த கப்பல் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.1.62 கோடி நஷ்ட ஈடு வழங்க கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் முதுநகரை சேர்ந்தவர் விமல். கப்பலில் சீமேன் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி கடலூர் முதுநகர் ஆஞ்சநேயர் கோவில் அருகே பைக்கில் விமல், தனது சகோதரி பேராசிரியை தென்றல், இவரது குழந்தை நவீலன்(2) ஆகியோருடன் சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே விமல் உயிரிழந்தார். மேலும் குழந்தை நவீலனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், இடது கால் முட்டிக்கு மேல் அகற்றப்பட்டது. இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வந்தது.
இறந்த கப்பல் ஊழியர் விமல் குடும்பத்தினர், காயமடைந்த குழந்தை நவீலன் குடும்பத்தினர், கடலூர் மூத்த வழக்கறிஞர் சிவமணி, வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் நஷ்ட ஈடு வழக்கு சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண் 1ல் தாக்கல் செய்தனர்.இந்த வழக்கில் இறந்த விமல் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடியே 62 லட்சத்து 48 ஆயிரம் மற்றும் 7.5 சதவீதம் வட்டியுடனும், குழந்தை நவீலனுக்கு ரூ.26 லட்சத்து 78 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிபதி ஆனந்தன் உத்தரவிட்டார். இந்நிலையில் விமல் பைக் மீது மோதிய லாரி அவ்வழியாக வந்த மற்றொரு ஆட்டோ மீதும் மோதியதில் புதுச்சத்திரம் வில்லியநல்லூரை சேர்ந்த அசோக் குமார் என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அசோக்குமாருக்கு ரூ.42 லட்சத்து 1,500 மற்றும் 7.5 சதவீதம் வட்டியுடன் நஷ்ட ஈடு வழங்க தீர்ப்பு வழங்கப்பட்டது.
The post விபத்தில் இறந்த கப்பல் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.1.62 கோடி நஷ்ட ஈடு appeared first on Dinakaran.