விபத்தில் 38 பேர் பலியான அஜர்பைஜான் விமானத்தின் மீது தவறுதலாக ரஷ்யா தாக்கியதா?: ஏவுகணை தாக்கிய அடையாளங்கள் இருப்பதாக தகவல்

3 weeks ago 4

புதுடெல்லி: ரஷ்யா தவறுதலாக ஏவுகணை ஏவி தாக்கியதில் அஜர்பைஜான் விமானம் விபத்துக்குள்ளாகி 38 பேர் பலியாகி இருக்கலாம் என அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் 67 பயணிகளுடன் பாகுவில் இருந்து ரஷ்யாவின் குரோஸ்னி நகருக்கு நேற்று முன்தினம் சென்றது. குரோஸ்னியில் பனி மூட்டம் காரணமாக தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அண்டை நாடான கஜகஸ்தானின் அக்தாவ் நகரின் விமான நிலையத்திற்கு 3 கிமீ முன்பாக அவசரமாக தரையிறங்க விமானியிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி வெடித்துச் சிதறியது.

இதில் விமானத்தின் முன்பகுதி முழுவதும் எரிந்த நிலையில், 38 பயணிகள் பலியாகினர். 29 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். விமானத்தின் மீது பறவை மோதியதால் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என ரஷ்ய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து அஜர்பைஜான், கஜகஸ்தான் நாடுகளின் நிபுணர் குழு விசாரித்து வரும் நிலையில் நேற்று திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விபத்துக்குள்ளான விமானத்தின் முன்பகுதியில் பெரிய ஓட்டை இருப்பதாகவும், வால் பகுதியில் ஏவுகணை வெடிபொருட்களால் ஏற்பட்ட சேதங்கள் இருப்பதாகவும் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட், இங்கிலாந்தின் யூரோநியூஸ், ஏஎப்பி உள்ளிட்ட பல சர்வதேச மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பாக, உக்ரைன் டிரோன்கள் ரஷ்யாவின் தெற்கு பகுதியில் தாக்குதல் நடத்தி உள்ளன. அதனால் சில விமான நிலையங்கள் மூடப்பட்டதால் ரஷ்யாவில் வேறெங்கும் தரையிறக்காமல் அண்டை நாடான கஜகஸ்தானுக்கு அஜர்பைஜான் விமானம் திருப்பி விடப்பட்டுள்ளது. எனவே, ரஷ்ய வான் பரப்பில் பறந்த அஜர்பைஜான் விமானத்தை உக்ரைன் டிரோன் என கருதி ரஷ்யாவின் வான் எதிர்ப்பு ஏவுகணைகள் ஏவி தவறுதலாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், விமானத்தில் உயிர் தப்பிய பயணிகள் குரோஸ்னியில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் வெளிப்பகுதியில் பயங்கர வெடிசத்தம் கேட்டதாக கூறி உள்ளனர். அந்த சமயத்தில் விமானத்தின் ஆக்ஸிஜன் டேங்குகள் வெடித்திருக்கலாம் என இங்கிலாந்தின் டெலிகிராப் செய்தி நிறுவனம் கூறி உள்ளது. மற்றொரு வீடியோவில், விமானத்தில் இருந்த பெண் பயணி ஒருவருக்கு காலில் குண்டுவெடிப்பால் நிகழும் காயம் ஏற்பட்டதாக காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு சர்வதேச மீடியாக்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளன.

முதலில் பறவை மோதியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பின்னர் திரும்பப் பெறப்பட்டது. தற்போது விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதில் பதிவான தகவல்களை வைத்து விமான விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யா மறுப்பு
தாக்குதல் யூகங்களை ரஷ்யா மறுத்துள்ளது. ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘‘விசாரணை முடியும் வரையில் காத்திருக்க வேண்டும்’’ என்றார். கஜகஸ்தான் செனட் சபாநாயகர் மவுலன் அஷிம்பாயேவ் கூறுகையில், ‘‘இது சாத்தியமற்றது. கஜகஸ்தானோ, ரஷ்யாவோ, அஜர்பைஜானோ நிச்சயமாக தகவல்களை மறைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. உண்மை மக்களுக்கு நிச்சயம் தெரியவரும்’’ என்றார். இதற்கு முன், 2014ம் ஆண்டு மலேசியன் ஏர்லைன்ஸ் எம்எச் 17 டான்பாசில் ரஷ்ய ஆதரவு படையால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post விபத்தில் 38 பேர் பலியான அஜர்பைஜான் விமானத்தின் மீது தவறுதலாக ரஷ்யா தாக்கியதா?: ஏவுகணை தாக்கிய அடையாளங்கள் இருப்பதாக தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article