வாழ்க்கையில் ஏதாவது கஷ்டம் ஏற்பட்டால் 'தலைவிதி' என பலர் புலம்புவதை கேள்விப்படுகிறோம். முற்பிறவியில் என்ன பாவம் செய்தேனோ? இந்த பிறவியில் அனுபவிக்கிறேன் என்றும் கூறுவதுண்டு. எனவே, நமக்கு ஏதேனும் ஒரு துன்பம் ஏற்படுகிறது என்றால் அதற்கு காரணம் நாம் முன் செய்த வினைப்பயன் தான். எனவே, நமக்கு ஒருவர் துன்பம் விளைவித்தால்கூட, அவரிடம் கோபம் கொள்ளாமலும் பழி வாங்க நினைக்காமலும் பொறுத்துக்கொள்ள வேண்டும். இதுபற்றி அனுமனுக்கு சீதை விளக்கமாக எடுத்துரைத்து உபதேசம் செய்துள்ளார்.
அசோகவனத்தில் சீதை இருந்தபோது சீதையை அரக்கியர்கள் பலர் துன்பப்படுத்தினர். அதற்காக சீதை அவர்களிடம் கோபம் கொள்ளவில்லை. மிகுந்த பொறுமையுடன் சகித்துக்கொண்டாள். தனக்கு நேரிடும் துன்பங்கள் எல்லாம் தன் வினைப்பயன் காரணமாகவே ஏற்படுகின்றன என்று உறுதியாக நம்பினாள் சீதை.
ராவண சம்ஹாரம் முடிந்த பிறகு அசோகவனத்தில் இருந்த சீதா தேவியிடம் விவரம் சொல்ல வந்த அனுமன், சீதா தேவியை வணங்கி `தாயே ஸ்ரீராமபிரான் வெற்றி வாகை சூடிவிட்டார். ராவணன் மாண்டான்' என்று கூறினார். அனுமன் கூறியதை கேட்டு மகிழ்ந்த சீதை `அனுமனே நான் முன்பொரு நாள் உயிர் துறக்க நினைத்த நேரத்தில் நீ வந்து எனக்கு ஆறுதல் கூறி காப்பாற்றினாய். இப்போது ராமபிரான் பெற்ற வெற்றிச் செய்தியை நீயே வந்து எனக்கு தெரிவித்தாய். ஏற்கனவே உனக்கு நான் சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தை தந்துவிட்டேன். முன்பை விடவும் அதிகம் சந்தோஷம் தரும் செய்தியை இப்போது கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்' என்றாள்.
அதற்கு அனுமன், `தாயே எனக்கு ஒரு வரமும் வேண்டியதில்லை. நான் விரும்புவது ஒன்றுதான். பல மாதங்களாக உங்களை பாடாய் படுத்திய இந்த அரக்கிகளை நான் தீயில் இட்டு கொளுத்த வேண்டும். அதற்கு தாங்கள் அனுமதிக்க வேண்டும்' என்றுகேட்டுக் கொண்டார்.
ஆனால் அனுமனின் கோரிக்கையில் சீதைக்கு உடன்பாடு இல்லை. எனவே அனுமனை பார்த்து `அனுமனே நீ நினைப்பது போல் இந்த அரக்கிகள் என்னை துன்புறுத்தி இருந்தாலும் அதற்கு இவர்களை தண்டிப்பதில் எனக்கு சம்மதம் இல்லை. நான் இப்படி துன்பம் அனுபவிப்பதற்கு காரணம் நான் முன்பு செய்த செயலின் விளைவுதான். பொன் மானாக வந்த மாயமானுக்கு ஆசைப்பட்டு அதை பிடித்து வர கணவரை அனுப்பியதும், சென்ற கணவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராமலும், லட்சுமணா, லட்சுமணா என்று அபயக்குரல் எழுப்பியதாலும் பயந்துபோன நான் எனக்கு காவலாக இருந்த லட்சுமணனை அனுப்பி பார்க்க சொன்னேன்.
அவர் என் கணவருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று மறுத்துக் கூறியும், நான் ஏற்றுக்கொள்ளாமல் சுடுசொற்களால் லட்சுமணனை கண்டித்து பேசினேன். ஒரு பாவமும் அறியாமல் இரவும் பகலுமாக எங்களை கண் இமைப்போல் காவல் காத்த லட்சுமணனின் மனம் நோகும்படி நான் பேசியது தான் இங்கே நான் அனுபவித்த துன்பத்துக்கு காரணம். எனவே நீ அரக்கிகளை ஒன்றும் செய்துவிடாதே, அவர்கள் அரக்கிகள் என்றாலும் பெண்கள். அவர்களுக்கு தீங்கு செய்து நீ பெரும் பாவத்தை தேடிக்கொள்ளாதே' என்று கூறினார்.
அனுமன் உண்மையை புரிந்துகொண்டு அரக்கிகள் மீதான கோபத்தை கைவிட்டார்.
இதைத்தான் மகாபாரதத்தில் வரும் ஆணிமாண்டவ்யரின் வாழ்க்கையும் நமக்கு உணர்த்துகிறது. சிறுவயதில் அவர் தும்பியின் வாலில் கூரிய முனை கொண்ட தர்ப்பைப் புல்லைச் செருகியதால், பிற்காலத்தில் மன்னன் ஒருவனால் கழுவில் ஏற்றப்பட்டார். மகரிஷியான தனக்கு ஏன் இப்படி ஒரு துன்பம் ஏற்பட்டது என்று ஆணிமாண்டவ்யர் தர்மதேவதையிடம் கேட்டபோது, சிறுவயதில் அவர் தும்பியைத் துன்புறுத்தியதுதான் காரணம் என்று கூறியது.