
சென்னை,
அறிமுக இயக்குனர் நிதின் வேமுபதி வைத்து நாயை மையமாக வைத்து தமிழில் புதிய படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு 'கூரன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. எஸ்.ஏ. சந்திரசேகர், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியன், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விலங்குகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வகையில் ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க நீதிமன்றம் சென்று போராடுவது போல இப்படம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற போலீஸ் நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. இப்படம் வருகிற 28-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், 'சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பிரதர்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் 'கூரன்' படம் குறித்து பேசியுள்ளார். அதாவது, "இந்த படம் ரொம்ப நன்றாக இருக்கிறது. வித்தியாசமான கதை மற்றும் திரைக்கதையில் உருவாகி உள்ளது. இதில் எஸ்.ஏ. சந்திரசேகர் சார் சிறப்பாக நடித்துள்ளார். இது ஒரு புதிய கான்செப்ட். அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று இந்த படத்தை பாருங்கள். எல்லோருக்குமே இந்த படம் பிடிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.