விதைகள் விரைவாக முளைக்க புதிய கண்டுபிடிப்பு!

3 months ago 12

விவசாயத்திற்கு நிலம், நீர், காலநிலை ஆகியவை இன்றியமையாதவை. அதேபோல இன்னொரு அம்சம் மிக மிக இன்றியமையாதது. அந்த அம்சம் வேறொன்றுமில்லை விதைதான். நல்ல விதைகள்தான் நல்ல விளைச்சலைத் தீர்மானிக்கும். நல்ல விதைகளைத் தேர்ந்தெடுப்பதே விளைச்சலுக்கான முதல்படி. நல்ல விதைகளைத் தெரிவு செய்தாலும், அவற்றை முறையாக முளைக்க வைப்பதும் முக்கியம்.அதற்குத்தான் விதை நேர்த்தி எனும் தொழில்நுட்பத்தை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள் விவசாய வல்லுநர்கள். விதை நேர்த்தி என்பது விதைகள் சீராக முளைப்பதற்கு ஊக்குவிக்கும். விதைகளை விரைவாக முளைக்க வைக்க ஒரு தொழில்நுட்பம் வந்தால் நன்றாக இருக்கும் அல்லவா. அந்தத் தொழில்நுட்பத்தை நமது தஞ்சாவூரில் உள்ள ஒரு அரசுக்கல்லூரி மாணவிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரியின் இயற்பியல் துறையைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவிகள் கா.சத்யா, கோ.மிருணாளினி, கு.கிருபா, சி.ஸ்ருதி, கா.இலக்கியா ஆகியோர்தான் இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்திருக்கிறார்கள். அதாவது அதிர்ச்சி அலைகளைப் பயன்படுத்தி விதைகளின் முளைப்புத் திறனை குறுகிய காலத்திற்கு கொண்டு வருவது குறித்து ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அதிர்ச்சி அலை என்பது அதீத காற்றழுத்த வேறுபாட்டினால் உருவாகும் ஒரு நிகழ்வு. ஒலியின் வேகத்தை விட அதிகமாக பயணிக்கக்கூடிய போர் விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகளின் மேற்புறத்தில் உருவாகுபவை அதிர்ச்சி அலைகள். குண்டு வெடிப்புகள் மற்றும் புவி அதிர்வின்போதும் இந்த அலைகள் உருவாகும். இவை மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்தும் பண்புகள் கொண்டவை. ஆனால் தீமை விளைவிக்கும் இந்த அதிர்ச்சி அலைகளை கட்டுப்பாட்டுடன் அதிர்ச்சி அலைக் குழாய்களில் உருவாக்கும்போது அதன் அதீத ஆற்றலைப் பயனுள்ளதாக மாற்ற முடியும். இந்த அலைகளானது விதையில் ஊடுருவும்போது விதைகளின் முளைவிடும் திறனும், வளர்ச்சி வேகமும் அதிகரிக்கும். விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உளுந்து மற்றும் வெந்தய விதைகளில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி முளைப்புத்திறன் அதிகரிப்பதை உறுதி செய்திருக்கிறார்கள். இந்தச் செடிகளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, செடிகளில் புரதச்சத்து அதிகரித்துக் காணப்பட்டது. அவற்றில் உள்ள மற்ற சத்துகளின் அளவுகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கம்ப்ரஸரால் அழுத்தப்பட்ட காற்றினைப் பயன்படுத்தி மெலிதான பட்டர் பேப்பரை உடைத்து, அதிர்ச்சி அலையை குழாயில் உருவாக்கி இந்த சோதனையை மேற்கொண்டிருக்கிறார்கள். குழாயின் மறுமுனையில் விதைகளை ஒரு பையில் வைத்து இறுகக் கட்டி அதிர்ச்சி அலைகளை அதன் மீது செலுத்தி இருக்கிறார்கள். அப்போது ஏற்படும் ஒலி அதிர்வானது விதைகளில் முழுவதுமாக பரவி முளைப்புத்திறனை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் ஐந்து நாட்களில் முளைக்கும் திறன் கொண்ட விதைகள் ஒரே நாளில் முளைத்து விடுகின்றன. இந்தக் கண்டுபிடிப்பால் விதைகளில் எவ்வித மரபணு மாற்றமும் ஏற்படுவதில்லை. இயற்கையான முறையில் விதைகளின் முளைப்புத் திறனை முன்கூட்டியே செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் இந்த கண்டுபிடிப்பு அமைந்திருக்கிறது.

இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி நெல், சோளம், கடலை உள்ளிட்ட அனைத்து விதமான சாகுபடி பயிர்களுக்கான விதைகளிலும் விரைவிலேயே முளைப்புத்திறன் கொண்டு வருவதற்கான ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள் இந்த அரசுக்கல்லூரி மாணவிகள். இந்த விதைகளைப் பயிரிடும்போது கிடைக்கும் பயன்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டதில் விதைகள் துரிதமான முளைப்புத் திறனை பெறுவது தெரியவந்துள்ளது. நீண்ட கால பயிர்கள் குறுகிய காலத்தில் முளைக்க இந்தக் கண்டுபிடிப்பு உதவிகரமாக இருக்கும். இதன்மூலம் தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் சிறந்த பயனை ஏற்படுத்த முடியும். செலவினம் மற்றும் கால நேரம் வெகுவாக குறைகிறது.

“விதைகளின் முளைப்புத் திறனை முன்கூட்டியே கொண்டு வருவதற்கான இந்தக் கண்டுபிடிப்பை மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக ஆய்வகத்தின் உபகரணங்களைக் கொண்டு நாங்கள் செயல்முறைப்படுத்தினோம். முதலில் வெந்தய விதைகளைப் பயன்படுத்தினோம். இயல்பாக 8 முதல் 9 நாட்களுக்குள் முளைக்கும் வெந்தயம் 28 மணி நேரத்திற்குள் முளை விட்டது. இதேபோல் 5 நாட்களில் முளைக்கும் உளுந்து ஒன்றரை நாட்களுக்குள் முளைப்புத்திறனை எட்டியது. விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் அதிக செலவில்லாமல் விதைகளின் முளைப்புத்திறனை முன்கூட்டியே வருமாறு இந்த கண்டுபிடிப்பை செய்திருக்கிறோம். எங்களின் கல்லூரி முதல்வர், துறை பேராசிரியர், உதவி பேராசிரியர், ஷிவ்விட் ஆராய்ச்சி மையத்தினர் ஆகியோரது வழிகாட்டுதலில் இதைச் சாத்தியப்படுத்தி இருக்கிறோம்’’ என்கிறார்கள் இந்த சாதனை மாணவிகள். “எங்கள் கல்லூரி மாணவிகளின் இந்தக் கண்டுபிடிப்பு விவசாயிகளுக்கு பெரும் உதவிகரமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இவர்களால் கல்லூரிக்கும், எங்களுக்கும் பெருமை கிடைத்திருக்கிறது’’ என நெகிழ்கிறார்கள் கல்லூரி முதல்வர் ஜான்பீட்டர், இயற்பியல் துறைத்தலைவர் அனுராதா, உதவி பேராசிரியர் சினேகா ஆகியோர்.
– என்.நாகராஜன்.

The post விதைகள் விரைவாக முளைக்க புதிய கண்டுபிடிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article