விதைகளை பாதுகாக்கும் பழங்குடியினப் பெண்கள்!

3 weeks ago 3

நன்றி குங்குமம் தோழி

தெலுங்கானாவின் ராய்க்கோடு மண்டலத்தில் உள்ள ஹம்னாபூர் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினப் பெண்கள் தங்களுடைய பாரம்பரிய நாட்டு விதைகளை சேகரித்து வருகிறார்கள். தங்கள் முன்னோர்கள் சொன்ன அறிவுரையின் படி இந்த விதைகளை பராமரித்து வருகிறார்கள் இந்தப் பெண்கள். பல ஹைபிரிட் விதைகளால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. நாட்டு விதைகளை இழந்து விட்டோம் என்று பல குரல்கள் எழுந்து வரும் நிலையில் இந்தப் பெண்கள் பல ஆண்டுகளாக இந்த நாட்டு விதைகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.

பெரும்பாலும் குடிசை வீடுகளிலேயே வசிக்கும் இந்த மக்கள் பசுவின் சாணம், சாம்பல் மற்றும் வேப்ப இலைகள் அடுக்கப்பட்ட சிறப்பு தொட்டிகளில் இந்த விதைகளை பாதுகாத்து வந்துள்ளனர். விதைகளின் சிறப்புகள் மற்றும் அதனை பல நூற்றாண்டு காலமாக பாதுகாக்கும் முறைகள் குறித்து பேசினார் டிடிஎஸ் அமைப்பின் துணை இயக்குநர் கிரிதர் பாபு. ‘‘இந்தப் பெண்கள் பாதுகாத்து வரும் விதைகள் அனைத்தும் அவர்களின் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தி வந்தவை. அந்த விதைகளை தான் அவர்கள் விதைத்தார்கள். அதில் வரும் பயிர்களை உண்டார்கள்.

மீண்டும் அதனை பாதுகாத்து மறுபடியும் விவசாயம் செய்து வந்தார்கள். இந்த விதைகள் அனைத்தும் நாட்டு மரபணு வகைகளை சேர்ந்தது. சுமார் 80 வகையான உள்நாட்டு விதைகள், தினை வகைகளை பழங்குடிப் பெண்கள் பாதுகாத்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து இந்த விதைகளை சேகரித்து மற்ற விவசாயிகளிடம் கொடுத்து அவர்களை பயிரிட சொல்லி மரபணு விதைகள் குறித்து விழிப்புணர்வை எங்களின் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் ஏற்படுத்தி வருகிறோம். வருடந்தோறும் மக்களின் விதைகளை காட்சிப்படுத்தி சந்தைப்படுத்துகிறோம். எங்களின் முக்கிய நோக்கம் இந்த விதைகளை மற்ற பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான்.

உழவுப் பணியை ஆண்கள் பார்த்துக் கொண்டாலும், விதைகளை பாதுகாப்பது, அறுவடை செய்வது அனைத்தும் பெண்கள். அடுத்தடுத்த தலைமுறையினருக்கு இந்த விதைகளை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இவர்கள் இதனை இன்று வரை பாதுகாத்து வருகிறார்கள். எங்களுக்கு இது குறித்து தெரிய வந்ததும் நாங்கள் இது பற்றி தெரிந்து கொண்டதும் இவர்கள் பாதுகாத்து வைத்திருந்த விதைகளை சேகரிக்க தொடங்கினோம். அதனை பாதுகாக்க 1996ல் விதை சேமிப்பு கிடங்கு ஒன்றை அமைத்தோம். அதில் சேமிக்கப்படும் விதைகளை விவசாயிகளுக்கு கொடுத்து வருகிறோம். தற்போது ஒவ்வொரு விவசாயியும் 15 முதல் 20 வகையான உள்நாட்டு விதைகளை சாகுபடி செய்கிறார்கள்.

அறுவடையின் போது, ​​விதைகளின் ஒரு பகுதியை தனியாக எடுத்து வைத்து அதனை அடுத்த பருவத்திற்காக பாதுகாக்கவும் செய்கிறார்கள். மேலும் க்ரிஷி விக்யான் கேந்திரா என்ற அமைப்பு மூலமாக பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் பயிர்களை எவ்வாறு காக்கலாம் என்பதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் அவர்களுக்கு புரிய வைக்கிறோம். தற்போது சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் விதைகளை சேகரித்து மற்ற மாவட்டத்துக்கும் கொடுத்து விளைச்சலை பெருக்கி வருகிறார்கள்’’ என்றவர் அவர்களின் உணவுகள் குறித்து விவரித்தார்.‘‘பழங்குடி மக்களின் உணவுகள் வியப்பானவை.

சாலையோரம், திறந்தவெளிகள் மற்றும் வயல்களில் வளரும் பல வகை கீரைகளை இவர்கள் உணவாக எடுத்துக் கொள்கிறார்கள். அந்தக் கீரைகளை நாம் பொதுவாக பயிரிடுவதில்ைல. காரணம், அவை என்ன கீரைகள், அதன் பெயர் எதுவுமே நமக்குத் தெரியாது. விவசாயிகளும் களை என நினைத்து அகற்றி விடுகிறார்கள். இவற்றில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இந்தக் கீரைகளை இவர்கள் சாப்பிட காரணம் உள்ளது. கடந்த காலங்களில் பஞ்சம் ஏற்பட்ட போது, பயிர்களின் இடையில் முளைத்த கீரைகளை சாப்பிட்டு பஞ்சத்திலிருந்து தப்பித்து இருக்கிறார்கள்.

அன்றிலிருந்து இந்தப் பயிரிடப்படாத கீரை வகைகள் இவர்களின் உணவாக மாறிவிட்டது. இவற்றை சட்னி அல்லது சூப்பாக செய்து சாப்பிடலாம் என்கிறார்கள் பழங்குடியினர். இந்தக் கீரைகள் குறித்து மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஐதராபாத்தில் திருவிழா நடத்தி, அதில் இந்தக் கீரைகளை சந்தைப்படுத்தி
வருகிறோம். மேலும் அதில் உணவுகளை சமைத்தும் தருகிறோம். ஹம்னாபூர் கிராமத்தில் 58 வயதான பெகுரி லக்ஷ்மம்மா என்பவர் 80 விதை வகைகளை பாதுகாத்து வந்துள்ளார். அவரின் அம்மா 100க்கும் மேற்பட்ட விதைகளை பாதுகாத்துள்ளார்.

அவர் மூலமாக விதைகளை பாதுகாக்கும் திறன் குறித்து 20க்கும் மேற்பட்ட நாடுகளில் பாரம்பரிய விதைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். அது நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் மூலம் விவசாயிகளின் விளைப்பொருட்களை சந்தை விலையை விட 10% அதிக விலைக்கு நாங்க பெற்றுக் கொள்வோம். பின்னர் அதனை பராமரித்து சேகரித்து ஜஹீராபாத், சங்கரேடி மற்றும் ஐதராபாத் போன்ற இடங்களில் நேரடியாக சென்று விற்பனை செய்கிறோம். இதன் மூலம் மக்களுக்கு நாட்டு விதைகளை பயிரிட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதால், ஆரோக்கியமான பல்லுயிர் பெருக்கத்தை ஏற்படுத்த முடிகிறது.

இதோடு நாங்கள் சில தினைகளை சிற்றுண்டிகளாக பதப்படுத்தியும் விற்று வருகிறோம். அதற்கான உணவகத்தை முழுக்க முழுக்க பெண்களை கொண்டு ஜஹீராபாத்தில் துவங்கி இருக்கிறோம். பல தலைமுறைகளாக பழங்குடியின மக்களால் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த இந்த விதைகள் இப்போது விவசாயிகளுக்கு நல்ல பலனை தருகிறது. சரியான விளைச்சல் இல்லை… தட்பவெப்ப நிலைகளை பயிர்கள் தாங்குவதில்லை என்ற பிரச்னைக்கு தீர்வாக இந்த நாட்டு விதைகள் இருக்கிறது. அனைத்து சூழலையும் தாங்கி நல்ல விளைச்சலை இந்த நாட்டு விதைகள் கொடுத்து வருகிறது’’ என்றார் கிரிதர் பாபு.

‘‘பல தலைமுறைகளாக
பழங்குடியின மக்களால்
பாதுகாப்பாக வைக்கப்பட்டு
இருந்த இந்த விதைகள்
இப்போது விவசாயிகளுக்கு
நல்ல பலனை தருகிறது.’’

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post விதைகளை பாதுகாக்கும் பழங்குடியினப் பெண்கள்! appeared first on Dinakaran.

Read Entire Article