பூந்தமல்லி: சென்னை வளசரவாக்கம், மசூதி தெரு பகுதியில் மூர்த்தி என்பவர் சொந்தமாக வெல்டிங் மற்றும் கார் பெயிண்டிங் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த கம்பெனி விதிமுறைகளை மீறி, உரிய தொழில் உரிமம் இல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இயங்குவதாக சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் 11வது மண்டல அதிகாரிகளுக்கு புகார்கள் தொடர்ந்து வந்தன. இதுகுறித்து மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், மாசு ஏற்படுத்தும் வகையில் உரிய அனுமதி இன்றி விதிமுறைகளை மீறி கார் சர்வீஸ் சென்டர் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த கம்பெனிக்கு முறையாக நோட்டீஸ் வழங்கினர். இந்த நிலையில் அந்த கம்பெனி நிர்வாகம் அதனை சரி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று வளசரவாக்கம் மண்டல அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நேரடியாக சென்று அங்கிருந்த கார் சர்வீஸ் சென்டருக்கு சீல் வைத்தனர். மேலும் உரிய அனுமதி பெற்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் கார் சர்வீஸ் சென்டரை இயக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் விதிமுறைகளை மீறி செயல்படும் கட்டிடங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் கண்டறியப்பட்டால் அந்த நிறுவனங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post விதிமுறைகளை மீறி செயல்பட்ட கார் சர்வீஸ் சென்டருக்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.