விதிமீறி ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்த விவகாரம்; அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை அனுமதிக்க முடியாது: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

3 weeks ago 3

புதுடெல்லி: விதிமீறி ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்த விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டப் பிரிவு – 21 இருப்பதை மறந்துவிடாதீர்கள். அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை அனுமதிக்க முடியாது என்று அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது. சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2019 முதல் 2022ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி நடந்த போது, கலால் துறையில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல் மாநில அரசின் ஊழல் தடுப்புப் பிரிவும் (ஏபிசி) வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

சுமார் 2,100 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்த இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய ஐஏஎஸ் அதிகாரி அனில் துதேஜாவை அமலாக்கத்துறை கைது செய்தது. முன்னதாக இவ்வழக்கு விசாரணையின் போது அமலாக்கத்துறை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் குறிப்பிட்ட ஒரே தேதியில் அமலாக்கத்துறையும், ஊழல் தடுப்புப் பிரிவும் அனில் துதேஜாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தது. இரு விசாரணை அமைப்புகள் முன்பும் காலையிலும், மாலையிலும் அனில் துதேஜா ஆஜரானார்.

இவ்விசயத்தில் அமலாக்கத்துறை இரவு வரை விசாரணை நடத்தி, அதன்பின் அனில் துதேஜாவை கைது செய்துள்ளது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘ஊழல் தடுப்புப் பிரிவு இந்த வழக்கை விசாரிக்கும் அதே நாளில் அமலாக்கத்துறையும் விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? ஊழல் தடுப்பு பிரிவின் விசாரணைக்கு மத்தியில் அமலாக்கத்துறை எப்படி நோட்டீஸ் அனுப்ப முடியும்? குற்றம்சாட்டப்பட்ட அனில் துதேஜாவை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு ஏன் அழைத்துச் செல்ல வேண்டும்? இத்தகைய அவசரம், தீவிரமான கிரிமினல் வழக்குகளில் கூட நடக்காது. அதே சமயம், நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21 என்ற ஒன்று இருப்பதை விசாரணை அமைப்புகள் மறந்துவிட்டதா?’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிமன்றம் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

The post விதிமீறி ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்த விவகாரம்; அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை அனுமதிக்க முடியாது: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article