
பிரயாக்ராஜ்,
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ‛மகா கும்பமேளா' நடந்து வருகிறது. இது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். அதன்படி இந்த மகா கும்பமேளா மிகவும் சிறப்பானது. கடந்த மாதம் 13-ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கிய நிலையில் மொத்தம் 45 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைகிறது. மகா கும்பமேளாவில் புனித நீராட நேரில் வர முடியாதவர்கள் போட்டோவை அனுப்பினால் அதனை நீரில் நனைப்பதாகவும் அதனால் புண்ணியம் சேரும் எனவும் இதற்காக 1,100 ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன்பிறகு மகா கும்பமேளா தண்ணீரை உத்தரபிரதேச மாநிலங்களில் உள்ள சிறைச்சாலைக்கு கொண்டு சென்று அங்குள்ள 90 ஆயிரம் கைதிகளை புனித நீராட வைத்தனர். மகா கும்பமேளா புனித நீர் ஆன்லைனில் கூட விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் மகா கும்பமேளாவுக்கு ஒரு பெண் சென்றுள்ளார். அவர் புனித நீராடிய நிலையில் அவருடைய கணவரால் வர முடியவில்லை. இதனால் அவருடைய கணவர் வீடியோ கால் செய்த போது அப்படியே செல்போனை தண்ணீரில் 3 முறை மூழ்கி எடுத்தார். அப்பெண் நீரில் செல்போனை நனைத்து எடுக்கும் வீடியோ வைரலாகிறது.