விண்ணைத்தாண்டி வந்த தேவதை!

1 week ago 3

சுனிதா… உலகமே உச்சரிக்கும் பெயர். விண்வெளியில் அதிக நேரம் பயணம் செய்த பெண் சாதனையாளராக ஏழு முறை 50 மணி நேரம், 40 நிமிடங்கள் விண்வெளியில் பயணம் செய்திருக்கிறார் சுனிதா. இந்திய தந்தை தீபக் பாண்டியாவுக்கும், சுலொவீனியத் தாய்க்கும் ஒகையோவின் யூக்லிட்டில் பிறந்தவர் சுனிதா வில்லியம்ஸ். 1983இல் நீட்காம் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். 1983இல் தேர்ச்சி பெற்றார். அதனைத் தொடர்ந்து 1987இல் அமெரிக்க கப்பற்படை அகாடமியிலிருந்து அறிவியலில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். 1995 ஆம் ஆண்டில் புளோரிடா தொழில்நுட்ப நிறுவனத்தில் முதுகலை அறிவியல் பட்டத்தையும் பெற்றார். 1987 மே மாதம், ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் இளநிலை அதிகாரியாக பணி புரியும் வாய்ப்பை சுனிதா பெற்றார். அடுத்ததாக கடற்படை விமானியாகப் பயிற்சி பெற்ற இவர் ஜூலை 1989இல் கப்பற்படை விமானியாக நியமிக்கப்பட்ட இவர், கப்பற் படையின் சோதனை பைலட் பள்ளியில் 1993இல் பட்டம் பெற்றார். ஒரு விமானியாக வளைகுடாப் போரில் பங்கேற்றார். 1992 செப்டம்பரில், புளோரிடாவைத் தாக்கிய ஆண்ட்ரூ சூறாவளி நிவாரண நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். 1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாசா விண்வெளி திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 30க்கும் மேற்பட்ட விமான வகைகளில் 3,000 க்கும் மேற்பட்ட விமான நேரங்களில் பறந்துள்ளார். அன்றிலிருந்து விண்வெளி மங்கையாகவே மாறிய சுனிதா தன்னை அதற்காகவே தயார்ப்படுத்தும் வாழ்வியலை ஏற்றுக்கொண்டார். விண்வெளியில் மாரத்தான், நடைபயணம் என பல சாதனைகளைச் செய்தார் சுனிதா வில்லியம்ஸ். இந்நிலையில் தான் 2024 ஆம் ஆண்டில், போயிங் இசுடார்லைனர் மூலம் அனைத்துலக விண்வெளி நிலையம் சென்ற முதல் பணிக்குழுவில் சென்றார். சுனிதாவும் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் பல்வேறு அறிவியல் சோதனைகள், பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். இவர்கள் பூமிக்குத் திரும்பும் காலம் நெருங்கினாலும், தொழில்நுட்பக் காரணங்களால் திரும்பி‌ வருவது தாமதமானது.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கினார் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழு. பல போராட்டங்கள், முயற்சிகள், தோல்விகள், எனக் கடந்து 9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்கு புறப்பட்டார். சுனிதா வில்லியம்சுடன் 4 வீரர்களை அழைத்து வந்த டிராகன் விண்கலம் இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா கடலில் தரையிறங்கும் திக்… திக்… நிமிடங்களை நாசா நேரடியாக ஒளிபரப்பு செய்தது. விண்வெளியில் ஆய்வுகளை மேற்கொள்ள பூமியில் இருந்து 408 கிமீக்கு மேலே விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. இங்கு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சுமார் 6 மாதம் தங்கியிருந்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்வர். அடுத்த குழு வந்ததும், 6 மாதப் பணியை நிறைவு செய்தவர்கள் பூமிக்கு திரும்புவார்கள். இதற்கான விண்வெளி வீரர்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தேர்வு செய்து அனுப்பி வைக்கும்.

நாசாவால் விண்வெளி வீரர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டவர் சுனிதா வில்லியம்ஸ் (வயது 59). இந்திய வம்சாவளி. இவர், ஏற்கனவே நாசாவால் 2 முறை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு சிறப்பாக பணியாற்றி சாதனை படைத்துள்ளார். திறமையான போர் விமானத்தின் விமானியான சுனிதா வில்லியம்ஸ், கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் தனது 3வது விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். இந்த ஸ்டார்லைனர் விண்கலம், நாசாவும் போயிங் நிறுவனமும் இணைந்து தயாரித்த புதிய விண்கலம். இதில் முதல் முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி சோதிப்பதற்காக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் ஒரு வார பயணமாக புதிய ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்றனர். ஆனால் விண்வெளிக்கு சென்ற ஸ்டார்லைனில் சில தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அதே விண்
கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் திரும்பி வர முடியவில்லை. ஸ்டார்லைனர் விண்கலம் மட்டும் காலியாக பூமிக்கு திரும்பியது. இதனால் அடுத்த குழுவை விண்வெளிக்கு அனுப்பும் போது மட்டுமே சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவர்களை திரும்ப அழைத்து வருவதற்காகவே கடந்த செப்டம்பர் மாதம் 4 வீரர்களுக்கு பதிலாக 2 வீரர்கள் மட்டும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர்.

அந்த 2 வீரர்களுடன், சுனிதா, வில்மோர் இருவரும் பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்தது. ஆனால், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலத்தில் ஏற்பட்ட சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக க்ரூ-10 குழு புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. 9 மாதமாக விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை பூமிக்கு அழைத்து வர அமெரிக்க அதிபர் டிரம்ப், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் அதிக முக்கியத்துவம் அளித்தனர். இதைத் தொடர்ந்து, தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, புதிய 4 வீரர்களுடன் டிராகன் விண்கலம் பால்கன்-9 ராக்கெட் மூலமாக கடந்த 15ம் தேதி புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இது, அடுத்த நாள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தது. அங்கு சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட வீரர்கள் புதிய குழுவினரை மகிழ்ச்சியுடன் வரவேற்ற புகைப்படங்கள், வீடியோக்களை நாசா வெளியிட்டது. இந்நிலையில், திட்டமிட்டபடி க்ரூ-10 குழுவினர் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பும் நிகழ்வுகள் காலை தொடங்கின. இந்திய நேரப்படி காலை 8.15 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், கடந்த செப்டம்பர் மாதம் விண்வெளிக்கு சென்ற வீரர்கள் நாசாவின் நிக் ஹக் மற்றும் ரஷ்யாவின் அலெக்சாண்டர் கோர்புனாவ் ஆகியோர் வெள்ளை கவச உடைகளை அணிந்து டிராகன் விண்கலத்தில் ஏறினர். அதற்கு முன்பாக விண்வெளி மையத்தில் புதிய வீரர்கள் அவர்களை வழியனுப்பி வைத்தனர். இந்த புகைப்படங்களையும் நாசா வெளியிட்டது.

காலை 10.35 மணிக்கு டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பிரிந்து பூமியை நோக்கித் தனது பயணத்தை தொடங்கியது. விண்கலம் பூமிக்கு திரும்ப 17 மணி நேரப் பயணத்தை மேற்கொள்ளும். அந்த வகையில், நேற்று அதிகாலை 3.27 மணிக்கு டிராகன் விண்கலம் பூமியை வந்தடையும் என நாசா அறிவித்திருந்தது. வானிலை சீராக இருந்தால் அந்த நேரத்தில் விண்கலம் புளோரிடா கடலில் தரையிறக்கப்படும் என அறிவித்தது.
அந்த திக்… திக்… நிமிடங்களை நாசா நேரடியாகவும் ஒளிபரப்பு செய்தது.

9 மாதமாக விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்புவதை நாசா விஞ்ஞானிகள் மட்டுமின்றி இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஒட்டுமொத்த உலக மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

17 மணி நேரப் பயணம்
*18ம் தேதி காலை 8.15: சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 வீரர்களும் டிராகன் விண்கலத்திற்குள் சென்றனர்.

* காலை 10.35: டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிரிந்து பயணத்தைத் தொடங்கியது.

*19ம் தேதி அதிகாலை 2.41: விண்கலம் அதன் சுற்றுப்பாதையில் இருந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும். (அதிகாலை 2.15 மணியிலிருந்து நாசா தனது நேரடி ஒளிபரப்பை தொடங்கியது)

* அதிகாலை 3.27: விண்கலத்தின் வேகம் குறைந்து, பாராசூட்கள் மூலம் விண்கலம் பாதுகாப்பாக கடலில் தரையிறங்கும். இது ஸ்பிலாஷ்டவுன் எனப்படுகிறது.

டிரம்ப், மஸ்க்குக்கு நன்றி

9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் தங்களை பூமிக்கு அழைத்து வருவதில் சிறப்புக் கவனம் செலுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப், எலான் மஸ்க் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

விண்வெளி வீரர்கள் எப்படி தரையிறங்குவர்?

சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களை அழைத்து வரும் டிராகன் விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் அதிவேகமாக நுழையும். அப்போது, 1,600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை அந்த விண்கலம் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். இதில் தவறு நிகழும் பட்சத்தில் விண்கலம் எரிந்து சாம்பலாகிவிடும். பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்ததும் விண்கலத்தின் வேகம் விரைவாக குறையும். இறுதியாக 4 பாராசூட்கள் விரிந்து விண்கலம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு பத்திரமாக புளோரிடா கடற்கரை பகுதியில் கடலில் தரையிறங்கும். விண்கலத்தில் இருக்கும் வீரர்கள் படகு மூலம் பத்திரமாக மீட்டு அழைத்து வரப்படுவார்கள்.

சாதனை படைத்தவர்

விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்த பெண் வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆவார். ஏற்கனவே இவர் 2007ல் தனது முதல் விண்வெளிப்பயணத்தின்போது, ​​29 மணி நேரம் 17 நிமிடங்கள் விண்வெளியில் நடந்து சாதனை படைத்துள்ளார். கல்பனா சாவ்லாவுக்கு அடுத்தபடியாக சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2வது அமெரிக்க விண்வெளி வீரர். 1965ம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பிறந்தவர் சுனிதா வில்லியம்ஸ். இவரது தந்தை தீபக் பாண்டிய குஜராத் மாநிலம் அகமதாபாத்தை பூர்வீகமாக கொண்டவர். கடற்படை விமானியான சுனிதா வில்லியம்ஸ் 30க்கும் மேற்பட்ட போர் விமானங்களை இயக்கி உள்ளார். இவரது கணவர் மைக்கேல் வில்லியம்சும் விமானி ஆவார்.

சுனிதா வில்லியம்சுக்குபிரதமர் மோடி கடிதம்

சுனிதா வில்லியம்சுக்கு பிரதமர் மோடி கடந்த 1ம் தேதி எழுதிய கடிதத்தை ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:சமீபத்தில் டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் விண்வெளி வீரர் மாசிமினோவை சந்தித்துப் பேசிய போது உங்களைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது உங்களைப் பற்றியும், உங்கள் பணியைப் பற்றியும் நாங்கள் எவ்வளவு பெருமை கொள்கிறோம் என்பதை விவாதித்தோம்.

நான் அமெரிக்கா சென்றபோது கூட அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் பைடன் ஆகியோரை சந்தித்த போது, உங்களைப் பற்றி விசாரித்தேன். 140 கோடி இந்தியர்கள் எப்போதும் உங்கள் சாதனையில் பெருமை கொண்டுள்ளனர். சமீபத்திய நிகழ்வுகள் உங்களின் ஊக்கமளிக்கும் மன உறுதியையும் விடா முயற்சியையும் மீண்டும் வெளிப்படுத்தி உள்ளன. நீங்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், எங்கள் இதயங்களுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள். இந்திய மக்கள் உங்கள் ஆரோக்கியத்துக்காகவும், உங்கள் பணியில் வெற்றி பெறவும் பிரார்த்தனை செய்கிறார்கள். நீங்கள் திரும்பிய பிறகு, இந்தியாவில் உங்களைப் பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியா தனது மிகவும் புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறது.

உங்கள் வருகைக்காக உங்களின் தாயார் போனி பாண்டியா ஆவலுடன் காத்திருப்பார். உங்கள் தந்தையின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும் என நான் நம்புகிறேன். 2016ம் ஆண்டு அமெரிக்க பயணத்தின்போது உங்களின் தந்தை தீபக் பாண்டியாவை (தற்போது காலமாகிவிட்டார்) சந்தித்தேன். இவ்வாறு கடிதத்தில் பிரதமர் மோடி கூறி உள்ளார். மேலும், சுனிதா வில்லியம்சின் கணவர் மைக்கேல் வில்லியம்சுக்கும் பிரதமர் தனது வாழ்த்துக்களை
தெரிவித்துள்ளார்.

சொந்தக் கிராமத்தில்கொண்டாட்டம்

சுனிதா வில்லியம்சின் சொந்த கிராமமான குஜராத்தின் மேசனா மாவட்டத்தில் உள்ள ஜூலசன் கிராம மக்கள், சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதையொட்டி தீபாவளி போல் வெடி வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

– கவின்.

The post விண்ணைத்தாண்டி வந்த தேவதை! appeared first on Dinakaran.

Read Entire Article