விடை பெற்றது 2024; உதயமானது 2025

2 days ago 2

சென்னை,

'சென்றது 2024, வந்தது 2025' என்று விடைபெற்று சென்ற 2024-ஐ 'குட்பை' என்று சொல்லும் மக்கள் உதயமாகியிருக்கும் 2025-ஐ வருகவே, வருகவே என்று வாழ்த்தி வரவேற்கிறார்கள். 2024-ம் ஆண்டு உயர்வும், தாழ்வும் கலந்த கலவையாக இருந்தது. மகிழ்ச்சி சம்பவங்களும் நடந்தன. இயற்கை இடர்பாட்டால் துயர சம்பவங்களும் நடந்தன. கடந்த ஆண்டு தொடக்கத்தின்போதும், ஆண்டு உருண்டோடியபோதும் வெளியிடப்பட்ட பல கணிப்புகள் நடக்கவில்லை. ஏமாற்றம் அளிப்பதாகவும் இருந்தது. எதிர்பாராததாகவும் இருந்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்து இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை.

கடைசியாக 5.2 சதவீதமே இருந்தது. ஆனால் பங்குசந்தை கணிப்பைவிட உச்சம் தொட்டது. 'நிப்டி 50' குறைந்தபட்சம் 20 ஆயிரம், அதிகபட்சம் 25 ஆயிரம் புள்ளிகள் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அதிகபட்சமாக 26,100 புள்ளிகள் வரை சென்று செப்டம்பர் மாதத்தில் சாதனை படைத்தது. 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 'நிப்டி 50' அதிகபட்சமாக 28 ஆயிரம் வரை செல்லும் என்று நம்பிக்கையூட்டும் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுபோல ஏப்ரல், மே மாதங்களில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ந்தேதி வெளியிடப்பட்டது. அனைத்து கருத்து கணிப்புகளுக்கும் மாறாக இந்த தேர்தல் முடிவுகள் இருந்தன.

கடந்த 2 தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பா.ஜ.க. இந்த முறை தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆட்சி அமைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் அனைத்து கணிப்புகளையும் மீறி டிரம்ப் 2-வது முறையாக ஜனாதிபதி ஆகியிருக்கிறார். இந்தியாவோடு நல்ல நட்புறவு கொண்டு இருப்பார் என்றாலும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை உயர்த்தப்போகிறார் என்ற செய்தி அதிர்ச்சியூட்டும் வகையில் இருக்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 2024-ல் தான் சரிந்துள்ளது.

தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் பவுனுக்கு ரூ.12 ஆயிரம் வரை உயர்ந்து, உச்சத்தை தொட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் விளையாட்டுத்துறையில் செஸ் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற 18 வயது குகேஷும், கேரம் போட்டியில் உலக சாம்பியனான 18 வயது காஜிமாவும் தமிழ்நாட்டுக்கு பெருமை தேடி தந்துள்ளனர். தமிழகத்தில் பெஞ்சல் புயல் பெரும் சீரழிவை ஏற்படுத்திவிட்டது. இப்படி பல ஏற்ற, இறக்கங்களை தந்த 2024-ம் ஆண்டு போய்விட்டது. 2025-ம் ஆண்டு பல ஆச்சரியங்களையும், மகிழ்ச்சி செய்திகளையும் தரும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 2026-ல் தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.

எனவே இந்த ஆண்டு தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட்தான் முழு பட்ஜெட்டாக இருக்கும் என்பதால் பல முக்கிய அறிவிப்புகள் அடுத்த மாதத்தில் வரும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும். இப்போது பல முதலீடுகள் வந்துகொண்டு இருப்பதால் தொழில் வளர்ச்சி இந்த ஆண்டில் சிறப்பாக இருக்கும் என்றும், பருவமழை பொய்க்காமல் நன்றாக பெய்து இருப்பதால் ஏரி, குளங்களெல்லாம் நிரம்பியுள்ள நிலையில் விவசாயம் செழித்து உணவு பொருள் உற்பத்தியும் தமிழ்நாட்டில் அதிகரிக்கும். ஆக 2025-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு மகிழ்ச்சியையும், வளத்தையும் கொண்டு சேர்க்கும் நல்ல ஆண்டாக அமையும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Read Entire Article