விடுதி வளாகத்தில் தூக்கில் தொங்கிய 9-ம் வகுப்பு மாணவி - உறவினர்கள் போராட்டம்

13 hours ago 2


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா ஒச்சந்தட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருடைய மூத்த மகள், காளையார்கோவில் அருகே உள்ள ஆண்டிச்சியூரணி கிராமத்தில் இயங்கி வரும் மாணவிகள் விடுதியில் தங்கி அருகில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு விடுதியில் உள்ள மாணவிகள் தூங்கச்சென்றனர். அதிகாலையில் விடுதி வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் தனது துப்பட்டாவில் தூக்கில் பிணமாக அவர் தொங்கினார். நேற்று காலையில் இதைப்பார்த்து விடுதி காப்பாளர், சக மாணவிகள் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து காளையார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். நேரில் வந்து விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் திரண்டனர்.

மாணவி எப்படி வேப்ப மரத்தின் மீது ஏறி தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்க முடியும் என மாணவியின் பெற்றோர், உறவினர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதை தொடர்ந்து அவர்கள் மாணவியின் இறப்பு குறித்து, விடுதி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரினர். அதுவரை மாணவியின் உடலை பெறமாட்டோம் எனக்கூறி, சிவகங்கையில் அம்பேத்கர் சிலை அருகில் இளையான்குடி-மானாமதுரை பிரிவு சாலையில நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலஅட்வின், கோட்டாட்சியர் விஜயகுமார், தாசில்தார் சிவராமன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதிகாரிகள் கூறியதை ஏற்காமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் தொடர்ந்து பரபரப்பு நிலவியது. சம்பவம் குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article