பட்டாசு ஆலை விபத்து; கூடுதல் இழப்பீடு கோரி போராடினால் மிரட்டுவதா? - டி.டி.வி.தினகரன் கண்டனம்

2 days ago 4

சென்னை,

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு வழங்க கோரி போராடிய பொதுமக்களை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி அரங்கேறும் பட்டாசு ஆலை விபத்துகளையும், அதன் மூலம் பறிபோகும் அப்பாவி உயிர்களையும் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நிவாரணம் வழங்கக்கோரி போராடும் பாதிக்கப்பட்ட மக்கள் மீது காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரே, பொதுமக்களை பார்த்து "ஒழுங்காக இருந்துக்கோ இல்லைனா வேறு மாதிரி ஆகிவிடும்" என மிரட்டும் தொனியில் பேசியிருப்பது தமிழகத்தில் சமூக விரோதிகள் மட்டுமல்ல காவல்துறையினரையும் பார்த்து பொதுமக்கள் அச்சப்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

தங்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்திடும் என நாடி வரும் பொதுமக்களின் நம்பிக்கையை காப்பாற்றிடும் வகையில் காவல்துறை செயல்பட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், காவல் கண்காணிப்பாளர் ஒருவரே பொதுமக்களை மிரட்டும் தொனியில் பேசியிருப்பது காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? என்ற கேள்வியை எழுப்புகிறது.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி அவர்களுக்கு உரிய இழப்பீடை வழங்கிட வேண்டும் எனவும், பொதுமக்களை காக்க வேண்டிய காவல்துறையினர் தங்களது பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து செயல்பட தேவையான அறிவுரையை வழங்கிட வேண்டும் எனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு கோரி போராடினால் மிரட்டுவதா? – விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல்…

— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 2, 2025

Read Entire Article