விடியல் தரும் வேளாண் சுற்றுலா!

1 month ago 9

வேளாண் சுற்றுலா தற்போது உலக அளவில் முன்னெடுக்கப்படுவது ஒரு ஆரோக்கியமான போக்கு ஆகும். வேளாண் சுற்றுலா என்பது பார்வையாளர்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவது, விவசாய நடைமுறைகள், கிராமப்புற மரபுகள் மற்றும் இயற்கைச் சூழல் பற்றிய நுண்ணறிவுகளை அறிந்து கொள்ள உதவுகிறது. இது பண்ணையில் தங்குதல், விவசாய சுற்றுப் பயணங்கள், விவசாய அனுபவங்கள், உள்ளூர் உணவுகளை சுவைத்தல் மற்றும் பாரம்பரிய திருவிழாக்களில் பங்கேற்பது உள்ளிட்ட சிறப்பான வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது. வேளாண்மை சுற்றுலா என்பது நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.தமிழ்நாட்டின் மாறுபட்ட நிலவியல் அமைப்பு, தட்பவெப்ப நிலைகள் மற்றும் கலாச்சார செழுமையானது வேளாண்மை சுற்றுலாவிற்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளது. அரசின் ஆதரவு, தனியார் துறை முதலீடுகள் மற்றும் கிராமப்புற அனுபவங்களில் சுற்றுலாப் பயணிகளின் அதிகரித்து வரும் ஆர்வம் ஆகியவற்றால் மாநிலத்தின் வேளாண்மை சுற்றுலா முயற்சிகள் வேகம் பெற்று வருகிறது.தமிழக அரசு கிராமப்புற வளர்ச்சி ஊக்குவிப்பதால் வேளாண் சுற்றுலாவின் திறனை அதிகரித்து அதன் வளர்ச்சிக்கு ஆதரவாக பல்வேறு திட்டங்களையும் கொள்கைகளையும் செயல்படுத்தி வருகிறது. சுற்றுலாத்துறை வேளாண்மைத் துறையுடன் இணைந்து வேளாண் சுற்றுலா குழுக்களை உருவாக்குதல், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல், சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக உட்கட்டமைப்புகளை உருவாக்குதல் போன்ற சிறப்பான முன்னெடுப்புகளை செயல்படுத்தி வருகிறது. இம்முயற்சியானது விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துதல், நிலையான விவசாயத்தை மேம்படுத்துதல் மற்றும் கிராம பாரம்பரியத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சியில் தனியார் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் மக்கள் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றுகின்றனர். தனிப்பட்ட கிராமப்புற அனுபவங்களை வழங்கும் விவசாயப் பண்ணைகள், ஓய்வு விடுதிகள் மற்றும் ஹோம் ஸ்டேக்களை தொழில் முனைவோர்கள் நிறுவியுள்ளனர்.தமிழகத்தின் பல பகுதிகள் முக்கிய வேளாண் சுற்றுலாத் தளங்களாக உருவாகியுள்ளன. அவற்றின் விவசாய நடைமுறை மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் சிறப்பான அனுபவங்களை அது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.தமிழகத்தின் பொள்ளாச்சி பகுதியானது, அதன் பசுமையான தென்னந்தோப்புகள், மலைப்பயிர்கள் விளையும் தோட்டங்கள் மற்றும் இயற்கை அழகுக்காக அறியப்படும் ஒரு பிரபலமான விவசாய சுற்றுலா மையமாக திகழ்கிறது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு அருகாமையில் உள்ள இப்பகுதி வனவிலங்கு சுற்றுலா அம்சத்தையும் உள்ளடக்கி உள்ளது.தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பரிய நெல் விவசாயத்தைப் பற்றிய ஒரு தெளிவான பார்வையைத் தருகிறது. அங்குள்ள வேளாண் பண்ணைகள் பார்வையாளர்களுக்கு நெல் நடவுப் பணிகளில் ஈடுபடவும், பழங்கால நீர்ப்பாசன முறைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், உள்நாட்டில் விளையும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உண்மையான தென்னிந்திய உணவுப் பொருட்களை ருசிக்கவும் வாய்ப்பளிக்கிறது. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ள தஞ்சை பெரிய கோயில் மற்றும் கல்லணை தமிழ்நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியத்தை அறிந்துகொள்ள உந்துகிறது.

தேயிலைத் தோட்டங்களுக்கு பெயர் பெற்ற நீலகிரியானது மேலும் ஒரு முக்கிய வேளாண் சுற்றுலா மையமாக திகழ்கிறது. தேயிலை பறித்தல், பதப்படுத்துதல் ஆகியவற்றில் பார்வையாளர்கள் பங்கேற்கலாம். இப்பகுதியில் இயற்கை விவசாயம், மலர் சாகுபடி, தேனீக்கள் வளர்ப்பு போன்ற சிறப்பான அனுபவங்களை பெறலாம். நீலகிரியின் குளிர்ந்த காலநிலை, அழகிய நிலவியல் அமைப்பு வசீகரத்தைத் தருகிறது.கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், விவசாயத்தின் நிலைத்தன்மைக்கும் வேளாண் சுற்றுலா பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. ஆயினும் வேளாண்மை சுற்றுலா பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ளும் சூழல் நிலவுகிறது. சாலைகள், போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட போதிய உள்கட்டமைப்புகள் விவசாயத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளது. பல கிராமப்புறங்களில் சரியான இணைப்பு சாலை இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் விவசாயத் தளங்களை சென்றடைவதில் சிரமம் ஏற்படுகிறது.

விவசாயிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வேளாண்மை சுற்றுலா நடவடிக்கைகளை திறம்பட நிர்வகிப்பதற்கு தேவையான திறன்களையும் அறிவையும் பெற அவர்களுக்கு பயிற்சி அளித்தல் அவசியம். விருந்தோம்பல், சந்தைப்படுத்துதல், வாடிக்கையாளர் சேவை, நிலையான சுற்றுலா நடைமுறைகள் பற்றிய பயிற்சித் திட்டங்கள் அவர்களின் திறனை மேம்படுத்தி உயர்தர சுற்றுலா அனுபவங்களை பார்வையாளர்களுக்கு வழங்குவதை உறுதி செய்யும். சுற்றுச்சூழல் சுற்றுலா, கலாச்சார சுற்றுலா மற்றும் சாகச சுற்றுலா போன்ற சுற்றுலாவின் பிற வடிவங்களுடன் வேளாண்மை சுற்றுலாவையும் ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைந்த மேம்பாட்டு அணுகுமுறையை உருவாக்குவது வேளாண் சுற்றுலா தளங்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியை மேம்படுத்தும். உள்ளூர் மக்களை மேம்படுத்துதல், வேளாண்மை சுற்றுலா செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்துதல், தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது, அதைப் பயன்படுத்துவது உள்ளிட்ட நடைமுறைகளும் வேளாண் சுற்றுலாவை மேம்படுத்தி வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்க வைக்கும். தமிழ்நாட்டின் விவசாய சுற்றுலா நிலையான கிராமப்புற வளர்ச்சியை ஊக்குவிக்கவும் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்துவோம் சுற்றுலா பயணிகளுக்கு வளமான அனுபவங்களை வழங்கவும் ஒரு தனித்துவமிக்க வாய்ப்புகளை வழங்குகிறது.
– பொறியாளர்
சுரேஷ் கோபாலகிருஷ்ணன்,
கல்வி செயற்பாட்டாளர்.

The post விடியல் தரும் வேளாண் சுற்றுலா! appeared first on Dinakaran.

Read Entire Article