![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38085097-2.webp)
சென்னை,
அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான 'விடாமுயற்சி' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்று திரையில் வெளியானது. லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர். மகிழ் திருமேனி இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'விடாமுயற்சி' படத்தை புகழ்ந்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 'விடாமுயற்சி என்ன மாதிரியான ஒரு தீவிரமான திரில்லர் படம். புதிர் கணக்குகளை விடையளிப்பதுபோல முதல் காட்சியில் இருந்து கடைசிவரை நம்மை தூண்டில் போட்டி இழுக்கிறது. அஜித்குமாரின் நடிப்பு, அவரது மென்மை வாய்ந்த நடிப்பினால் தனியாளாக படத்தினை தனது தோளில் சுமக்கிறார். எதார்த்தமான ஆக்ஷன் திரைப்படத்தில் கடைசியாக வரும் உணர்ச்சிப்பூர்வமான காட்சியில் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்துள்ளார். .பின்னணி இசையின் அனிருத் எப்போதும் மினுமினுக்கும் இசையை தருகிறார். அதனால் ஒவ்வொரு முறையும் அவரை வாழ்த்தாமல் இருக்க முடிவதில்லை.மகிழ் திருமேனி திரைக்கதையை இறுக்கமாக வைத்திருந்தார். காட்சிகளை அமைத்திருந்த விதமும் அந்த மாதிரியான இடங்களில் ஒரு தொடர்ச்சியை கொண்டுவருவது அவரது கடினை உழைப்பைக் காட்டுகிறது. நிரவ், ஓம்பிரகாஷ் அவர்கள் படத்தினை உலகத் தரத்தில் காட்டியுள்ளார்கள். திரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் என அனைவரும் சிறப்பாக நடித்திருந்தார்கள். லைகாவின் மிகப்பெரிய வெற்றிக்கு வாழ்த்துகள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38085130-2a.webp)
மகிழ் திருமேனிக்கு முன்பு விக்னேஷ் சிவன், அஜித்தின் 62வது திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது.இதனை லைகா நிறுவனமே அதிகாரபூர்வமாகவே அறிவித்தது. ஆனால் அதன் பிறகு சில பல காரணங்களால் விக்னேஷ் சிவன் இப்படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தான் மகிழ் திருமேனி அஜித்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்நிலையில் 'விடாமுயற்சி' வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு வைரலாகி வருகின்றது.
கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.கடந்த 2022-ம் ஆண்டு நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார்.