விஜய்யுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா? திருமாவளவன் பதில்

2 months ago 8

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், விஜய் கட்சியுடன் எதிர்காலத்தில் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த திருமாவளவன், தெரியாது என்றார். மேலும், விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்கிறேன் என்றும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது எங்களது கொள்கை எனவும் திருமாவளவன்  கூறினார்.

முன்னதாக, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில், விஜய்யுடன் ஒரே மேடையை பகிர்ந்து கொள்வதை திருமாவளவன் புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளானது. புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால், விஜய்யுடன் மேடையேறினால் தேவையில்லாத சலசலப்புகள் ஏற்படும் என்பதால் நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக திருமாவளவன் கூறினார்.

அதேநேரத்தில் புத்தக வெளியீட்டு விழா  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆதவ் அர்ஜுனா  விசிகவில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இத்தகைய பரபரப்புக்கு இடையே, விஜய்யுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு தெரியாது என திருமாவளவன் பதிலளித்து இருப்பது கவனம் பெற்றுள்ளது.

Read Entire Article