விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கைக் திருவிழா’ என்ற பெயரில் நேற்று மாலை நடைபெற்றது. மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் 100 அடி கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஏராளமானோர் நேற்று முன்தினம் மாலை முதலே மாநாட்டு திடலை நோக்கி வரத்தொடங்கினர்.
காலை 7 மணி முதலே மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த 3 பிரதான நுழைவு வாயில்கள் வழியாக மாநாட்டு திடலுக்குள் அனைவரும் அனுமதிக்கப் பட்டனர். விக்கிரவாண்டி, தென்னமாதேவி, ஓங்கூர், நங்கிலி கொண்டான், மொரட் டாண்டி, கெங்கராம்பாளையம் சுங்கச்சாவ டிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், காவல்துறையின் ‘ஜீரோ டிராபிக்’ என்ற அறிவுறுத்தலின்படி, முற்பகல் 11 மணிக்கு பின் அனைத்து வாகனங்களும் கட்டணம் வசூலிக்காமல் அனுப்பி வைக்கப்பட்டன.