செய்யாறு, பிப்.13: அவதூறாக பேசிய வழக்கில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். விஜய்க்கு பணக்கொழுப்பு, வாய் கொழுப்பு அதிகமாக இருப்பதாக கூறியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பிரம்மதேசம் பகுதியில் நாதக சார்பில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த ராஜேந்திர சோழன் பிறந்த நாள் பெருவிழாவில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன உணர்வுகளை தூண்டும் வகையில் அவதூறாக பேசியதாக பிரம்மதேசம் போலீசில் பாமக ஒன்றிய செயலாளர் சுரேஷ் புகார் அளித்தார். அந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்பேரில், நேற்று காலை 10.30 மணியளவில் செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார். அப்போது, மாஜிஸ்திரேட் அடுத்த வாய்தா தினமான மார்ச் 4ம் தேதி புகாருக்கு பதில் அளிக்க ஆஜராக வேண்டி உத்தரவிட்டார். பின்னர், நீதிமன்றத்தில் இருந்து வெளியேறிய சீமான் நிருபர்களிடம் கூறுகையில், `தமிழகத்தில் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வரும் நிலையில் செய்யாறு பகுதிக்கு வருவதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அமைப்பாளர்களிடம் கலந்தாய்வு செய்ய கூட்டத்தில் பங்கேற்கிறேன். `தனித்து போட்டியிடுகிறேன் என என்னை கொச்சைப்படுத்தாதீர்கள். கவலையோடு கண்ணீரோடு பிரச்னைகளோடு நிற்கின்ற மக்களுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறேன். ஈரோடு கிழக்கு ெதாதிக்கு இடைத்தேர்தல் என்பது இடைத்தேர்தல் தான், என்றார்.
விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்தித்தது குறித்து சீமான் கூறுகையில், `தமிழ்நாட்டில் எத்தனை ஆறு, எத்தனை ஏரி, எத்தனை குளம், எத்தனை சமூக மக்கள். அந்தந்த சமூக மக்களின் பிரச்னைகள் பற்றி என்ன தெரியும். எத்தனை மக்கள், எவ்வளவு வாக்கு சதவீதம் என எதுவுமே தெரியாத பிரசாந்த் கிஷோர் அரசியல் வியூகம் வகுத்து என்ன செய்து விடப் போகிறார். தமிழகத்தை ஆண்ட முந்தைய தலைவர்கள் காமராஜர், அண்ணா போன்றோர் என்ன வியூகம் வகுத்தார்கள். உடலில் கொழுப்பு இருப்பது கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், பணக்கொழுப்பு இருந்தால், வாய் கொழுப்பு இருந்தால் இது எல்லாம் தேவைப்படும். அதை பற்றி பேசி நேரத்தையும் காலத்தையும் வீணடிக்க வேண்டாம், என்றார்.
The post விஜய்க்கு பணக்கொழுப்பு, வாய் கொழுப்பு அதிகம் நாதக ஒருங்கிணைப்பாளர் பரபரப்பு பேட்டி அவதூறு வழக்கில் செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.