
புதுடெல்லி,
நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தற்போது கட்சி தொடங்கப்பட்டு இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதற்கிடையே 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு தேர்தல் பணிகளை விஜய் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஒய் பிரிவு பாதுகாப்பு என்றால் 8 முதல் 11 சி.ஆர்.பி.எப் வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிற்குள் மட்டும் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜய்யை தங்கள் பக்கம் இழுப்பதற்காக அவருக்கு மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளதா என்று அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
த.வெ.க. தலைவர் விஜய்க்கு என்ன அடிப்படையில் மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுத்துள்ளது என்பது தெரியவில்லை. ஒரு கட்சியின் தலைவராக உருவாகியிருக்கிறார்; நடிகராக இருக்கிறார். அவர் செல்லும் இடங்களில் கூட்டம் அதிகமாக சேரலாம். அதனால் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பெருந்தன்மையாக கொடுத்திருந்தால் மகிழ்ச்சி.
இல்லை என்றால் அரசியல் ரீதியாக, சுயநலத்தோடு விஜய்யை தங்கள் பக்கம் இழுப்பதற்காக, அவரை சந்தோஷப்படுத்துவதற்காக இந்த ஒய் பிரிவு பாதுகாப்பை கொடுத்திருக்கிறார்களா? இவ்வாறு அவர் கூறினார்.