சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அன்புமணி அரசியலுக்காக பேசுகிறார். தமிழக அரசு அதிகாரத்திற்கு உட்பட்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பேசும் அன்புமணி, இதையே 4 ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடியிடம் கேட்டிருக்க வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதிகளை 80% நிறைவேற்றி இருக்கிறது. அவர்களை விட யாரும் நல்லாட்சி தர முடியாது. ஒன்றிய பாஜ அரசோ தமிழகத்துக்கான நிதியை வழங்காமல் வஞ்சகத்துடன் செயல்படுகிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பிரசாந்த் கிஷோர் சந்திப்பு ஒரு வியாபாரம் என்று சொல்லலாம். பிரசாந்த் கிஷோர் வகுக்கும் திட்டத்தால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அரசு நலத் திட்டங்களுக்குதான் மக்கள் வாக்களிப்பார்கள். அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என நீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பில் பாஜவின் சித்து விளையாட்டு உள்ளது. அதிமுகவை பயமுறுத்தவே இதுபோன்ற வேலைகளை பாஜ செய்கிறது. நாளையே அதிமுக, பாஜவுடன் கூட்டணி வைக்க ஒப்புக் கொண்டால், இதையெல்லாம் விட்டுவிட்டு இரட்டை இலையை முடக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
The post விஜய், பிரசாந்த் கிஷோர் சந்திப்பு ஒரு வியாபாரம் அதிமுக உள்கட்சி விவகார தீர்ப்பு பாஜவின் சித்து விளையாட்டு: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.