"விஜய் பா.ஜனதாவின் 'சி டீம்'..." - அமைச்சர் ரகுபதி

2 months ago 11

புதுக்கோட்டை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வந்த விஜய், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ரிமோட் மூலம் மேடையில் இருந்தே 100 அடிக் கம்பத்தில் கொடியேற்றினார். பின்னர் தொண்டர்களிடையே பேசிய அவர் அரசியல், தங்களின் அரசியல் நிலைப்பாடு, கட்சியின் கொள்கை, கொள்கைத் தலைவர்கள் குறித்து பேசினார். பெண்களை கொள்கைத் தலைவர்களாக கொண்டு இயங்கும் ஒரே கட்சி தமிழக வெற்றிக் கழகம் தான் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து மாநாட்டில் பேசிய அவர், பிளவுவாத அரசியல், திராவிட மாடல், நீட் எதிர்ப்பு, சாதி வாரி கணக்கெடுப்பு என பல்வேறு அரசியல் பிரச்னைகள் குறித்து பேசினார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் அதிக சம்பளம் பெறும் நடிகராகவும் இருக்கும் இந்த காலகட்டத்தில், என்ன காரணத்துக்காக தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்பதை விஜய் தெளிவுபடுத்தினார். தனது முதல் மாநாட்டில் கிட்டதட்ட 45 நிமிடங்கள் விஜய் பேசினார்.

இதனிடையே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாநாடு தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், "விஜய் 'ஏ டீமும்' இல்லை, 'பி டீமும்' இல்லை. பாஜகவின் 'சி டீம்'. நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாடு பிரமாண்ட சினிமா மாநாடு. அ.தி.மு.க. பற்றி பேசினால் எடுபடாது என்பதால் தி.மு.க. பற்றி விஜய் பேசி உள்ளார். அ.தி.மு.க.வின் வாக்குகளை ஈர்ப்பதற்காக, அ.தி.மு.க. பற்றி விஜய் பேசவில்லை.

அ.தி.மு.க. தொண்டர்களை பிரிப்பதே விஜய்யின் குறிக்கோள். பா.ஜ.க.வை வலுப்படுத்தும் வகையில், அ.தி.மு.க. தொண்டர்களை பிரிப்பதே விஜய்யின் குறிக்கோள். நேற்று விஜய் கூட்டிய கூட்டம் போன்று ஏற்கனவே தி.மு.க. நிறைய கூட்டம் நடத்தி உள்ளது. திராவிட மாடல் ஆட்சியை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது. சிறுபான்மையினர் நலன் மற்றும் கொள்கைக்காக 2 முறை ஆட்சியை இழந்த கட்சி தி.மு.க. கவர்னரை எதிர்த்து பேசினால் தான் தமிழகத்தில் எடுபடும். திராவிடம் தமிழகத்தில் இருந்து அகற்ற முடியாத சொல். இளைஞர்கள் நம்பும் ஒரு இயக்கமாக தி.மு.க. உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

Read Entire Article