விஜய் குறிப்பிட்ட அந்த `சிறு வயது' பாண்டிய மன்னன் யார்...? - இணையத்தில் தேடும் நெட்டிசன்கள்

2 months ago 13

சென்னை,

நேற்று நடந்த தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் குட்டிக்கதையை கூறி விஜய் பேசுகையில், "ஒரு நாட்டில் பெரிய போர் வந்ததாம். அப்போது அந்த நாட்டில் சக்திவாய்ந்த தலைமை இல்லாததால், ஒரு பச்சைப்பிள்ளை கையில்தான் பொறுப்பு இருந்ததாம். இதனால் அந்த நாட்டில் பெரிய தலைகள் எல்லாம் பயந்தார்கள். அந்த சின்னப்பையனும், படையை திரட்டி போருக்கு போகலாம் என்றானாம். அப்போது அந்த பெருந்தலைகளெல்லாம், நீ சின்னப்பையன் அங்கு நிறைய எதிரிகள் இருப்பார்கள். களத்தில் அவர்களை சந்திப்பதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை.

இது விளையாட்டு கிடையாது. போரில் ஜெயிக்க வேண்டும். உனக்கு துணை இல்லாமல் எப்படி ஜெயிக்க போற...' என்று எல்லோரும் கேட்டப்போது, எந்த பதிலும் சொல்லாமல் போருக்கு தனியாக தன் படையுடன் சென்ற அந்த பாண்டிய வம்சத்தை சேர்ந்த அந்த பையன் என்ன செய்தான்? என்பதை சங்க இலக்கியத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். படிக்காதவர்கள் படித்தோ, அல்லது படித்தவர்களிடம் கேட்டோ தெரிந்துகொள்ளுங்கள். ஆனால் கெட்ட பையன் சார் அந்த சின்னப்பையன்.." என்று அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து குட்டிக் கதையில் விஜய் சொன்ன அந்த பாண்டிய மன்னர் யார்? என நெட்டிசன்கள் இணையதளத்தில் தேட ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் விஜய் சுட்டிக்காட்டியது பாண்டிய மன்னர் நெடுஞ்செழியன் என தெரியவந்துள்ளது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப் போல, போரிட வந்தவர்களை தன் வீரத்தாலும், சாமர்த்தியத்தாலும் சிறுவயதிலேயே தோற்கடித்தவர் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் என வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

 

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

தான் செய்த தலையாலங்கானத்துப் போரினால் சிறப்படைந்த, நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னராவார். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர் சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்ட இவர், தான் செய்த தலையாலங்கானத்துப் போரினால் சிறப்படைந்தவர். இவர் போருக்குச் செல்லும்போது, சிறுவர்கள் அணியும் ஐம்படைத் தாலியைத் தன் கழுத்தில் இருந்து கழற்றவில்லை என்பதை வைத்து, இவர் மிகச்சிறு வயதிலேயே போருக்குச் சென்றார் என்று கூறப்பட்டுள்ளது.

நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன், ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்து சோழநாட்டை ஆண்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர். இவ்வனைவரும் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தாக்கினர். எதிர்த்துப் போரிட்ட நெடுஞ்செழியன் அனைவரையும் தோற்கடித்தார் என்பது வரலாறு.

Read Entire Article