புதுக்கோட்டை: விஜய் என்ற மீனை வலையில் சிக்க வைப்பதற்காக ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்து உள்ளார். புதுக்கோட்டையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியதில் மாநில அரசை, ஒன்றிய அரசு ஆலோசனை செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது.
இது சோதனைக்காகவா? அங்கு யார் யார் வருகிறார்கள் என்று பார்ப்பதற்காகவா? அந்த மீனை தங்களுடைய வலையில் சிக்க வைப்பதற்காகவா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதிமுகவில் உள்ள தொண்டர்கள் இரட்டை இலை சின்னத்தை தவிர வேறு எந்த சின்னத்திற்கும் வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் தற்பொழுது நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தொண்டர்கள் முதல் முறையாக உதயசூரியனுக்கு வாக்களித்துள்ளார்கள். நாதக தனியாகத்தான் தேர்தலை சந்திக்கப் போகிறது என்று கூறுகிறார்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனியாக அவர்கள் தேர்தலை சந்தித்து 234 தொகுதியிலும் டெபாசிட் இழந்த கட்சியாக நாதக இருக்கும்.
மயிலாடுதுறை சம்பவத்தில் யார் உண்மையான குற்றவாளியோ அவர்களை பிடித்து நாங்கள் கைது செய்கின்றோம். எந்த சூழ்நிலையிலும் தவறான நபர்களை கைது செய்துவிடக்கூடாது என்பதுதான் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு. அண்ணாமலை சொல்வதற்கெல்லாம் நாங்கள் ஆட முடியாது. ஒரு சம்பவம் நடப்பது என்பது இயற்கை அதனை நாங்கள் தடுக்க முடியாது.
ஆனால் ஒரு சம்பவம் நடந்த பிறகு அந்த குற்ற செயலில் ஈடுபடுபவர்களை நாங்கள் கண்டுபிடிக்கிறோமா இல்லையா என்பது தான் முக்கியம். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்துள்ளோம். இதன் பிறகு நீதிமன்றத்தில் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நாங்கள் நிரூபிப்போம். எங்களின் பார்வை மக்கள் மீது இருக்கிறது மக்களுக்காக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* அண்ணாமலை தாத்தாவே வந்தாலும் முடியாது…
அமைச்சர் ரகுபதி கூறுகையில், ‘அண்ணா அறிவாலய செங்கல்லை அகற்றுவேன் என்ற அண்ணாமலையின் பேச்சு, இதைப்போல முட்டாள் தனமான பேச்சு இருக்க முடியாது. எங்களைத் தொடக்கூட முடியாது. அண்ணா அறிவாலயத்தில் நுழைய கூட முடியாது. அண்ணா அறிவாலயம் சட்டப்படி, முறைப்படி நன்றாக கட்டப்பட்டுள்ளது. அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளது. அண்ணாமலை அல்ல அவரது தாத்தாவே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. இது அவருக்கும் நன்றாக தெரியும். அங்குள்ள செங்கல்லை அல்ல, சிறு புல்லைக்கூட புடுங்குவதற்கு வாய்ப்பு கிடையாது. நாங்கள் அனுமதித்தால் தான் அவர் உள்ளே வர முடியும்’ என்றார்.
The post விஜய் என்ற மீனை வலையில் சிக்க வைக்க ‘ஒய்’ பாதுகாப்பு: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.