விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன் - தமிழகம் திரும்பிய அண்ணாமலை பேட்டி

3 days ago 3

சென்னை,

லண்டனில் உள்ள 'ஆக்ஸ்போர்டு' பல்கலைக்கழகத்தில் 'சர்வதேச அரசியல்' என்ற தலைப்பிலான படிப்பை பயில, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்வானார். இதற்காக, கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம், அண்ணாமலை இங்கிலாந்து புறப்பட்டு சென்றார். சர்வதேச அரசியல் படிப்பை பயின்று வந்த அதே காலக்கட்டத்தில், லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அண்ணாமலை கலந்து கொண்டார். மேலும் அங்குள்ள தமிழக மாணவர்களை சந்தித்து, அண்ணாமலை கலந்துரையாடினார்.

இந்த நிலையில், சர்வதேச அரசியல் படிப்பை முடித்துவிட்டு நேற்று 30-ந் தேதி (சனிக்கிழமை) இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு இன்று மதியம் தமிழகம் வந்தடைந்தார் அண்ணாமலை. சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலைக்கு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன்பின்னர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அரசியல் படிப்பு தொடர்பாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முன்னாள் பிரதமர்கள் பாடம் எடுத்தார்கள். 3 மாத காலம் எனக்கு கிடைத்த பாக்கியம். கடந்த 3 மாதங்களில் பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை வெற்றிகரமாக நடந்துள்ளது. உறுப்பினர் சேர்கைக்கு உழைத்த எச்.ராஜா உள்பட மூத்த தலைவர்களுக்கு நன்றி. தமிழக பாஜகவில் கிளைத் தலைவர் முதல் மாநில தலைவர் வரை தேர்தல் நடக்கிறது. 3 மாதங்களில் தமிழக அரசியல் களத்தில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. 2026 சட்டசபை தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது.

அப்போதும் சொல்கிறேன்.. இப்போதும் சொல்கிறேன்.. அரசியலுக்கு வந்துள்ள விஜய்யை வரவேற்கிறேன். விஜய்யின் அரசியல் வருகை மக்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. திராவிட சிந்தாந்தத்தையே விஜய் பேசுகிறார்; புதிதாக ஒன்றும் இல்லை. அக்டோபர் மாதத்திற்கு பிறகு விஜய் எத்தனை முறை வெளியே வந்துள்ளார்.

தமிழகத்தில் திராவிட கட்சிகள் மூன்றாக பிரிந்துள்ளன. திராவிட கட்சிகளின் கொள்கையைத் தான் விஜயும் பேசுகிறார். பாஜகவை பொறுத்தவரை புதிய கட்சிகளுக்கு பயப்படாது. எங்கே விமர்சிக்க வேண்டுமோ, அங்கே விமர்சிப்போம். 2026 சட்டமன்றத் தேர்தல் சரித்திர தேர்தலாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article