பிரயாக்ராஜ்: கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 18 பக்தர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. கடந்த 15ம் தேதி இரவு உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்குச் செல்லும் ஏராளமான பக்தர்கள் புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூடியிருந்தபோது, சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், சில ரயில்கள் வேறு பிளாட்பார்மில் வருவதாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். இரண்டு நடைமேடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும், இதனால் சிலர் மயக்கமடைந்ததாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்த பயணிகளுக்கு தலா ரூ.2.5 லட்சமும், சிறிய காயமடைந்த பயணிகளுக்கு தலா ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக ரயில்வே அறிவித்தது. இந்த நிலையில் புதுடெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 18 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த பிரேத பரிசோதனை அறிக்கையின்படி பலியான 18 பேரில் பெரும்பாலானோர் மூச்சுத் திணறல் மற்றும் மார்பு பகுதியில் ஏற்பட்ட காயங்களால் இறந்ததாக கூறப்பட்டுள்ளது. 18 பேரில் 15 பேர் மூச்சுத்திணறல் காரணமாகவும், இரண்டு பேர் ரத்தக்கசிவு அதிர்ச்சியாலும், ஒருவருக்கு தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவும் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
The post கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 18 பக்தர்கள் பலியானது எப்படி? பிரேத பரிசோதனை அறிக்கை தகவல் appeared first on Dinakaran.