சென்னை: செங்கல்பட்டு அருகே பாபுராயன் பேட்டையில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ விஜய வரதராஜர் கோயிலில் சீரமைப்பு பணிகளை உடனடியாக தொடங்க அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி. ஜெகந்நாத் தாக்கல் செய்திருந்த மனுவில், “செங்கை மாவட்டம் பாபுராயன் பேட்டையில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ விஜய வரதராஜர் கோயில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வடகலை வைணவ சம்பிரதாயப்படி இந்த கோயிலில் திருப்பணிகளை மேற்கொண்டு, சம்ப்ரோக் ஷணம் நடத்த அறநிலையத் துறைக்கு வேண்டும்” எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த கோயிலில் சம்ப்ரோஷணம் நடத்த 12 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்த 2020-ம் ஆண்டு அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி வழக்கறிஞர் பி.ஜெகந்நாத் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.