விசாரணை, வாக்குமூலம் பெறும் போது போலீஸ் எடுக்கும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்ய புதிய செயலி

2 months ago 10

நாகர்கோவில்: குமரி மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். எஸ்.பி. சுந்தரவதனம் பேசுகையில், போக்சோ புகார்களுக்கு தாமதம் இன்றி உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். போக்சோ குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதோடு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும். மாலை ரோந்து, இரவு ரோந்து பணிகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றத்தை தடுப்பதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்.

திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து திருட்டு போன பொருள்களை மீட்பதில் முக்கியத்துவம் கொடுத்து செயலாற்ற வேண்டும். நீதிமன்ற பிடியாணையை நிறைவேற்றுவதில் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்றார். காவல்துறை புலன் விசாரணை நடவடிக்கைகளில் எடுக்கப்படும் வீடியோ பதிவுகள் நீதிமன்ற விசாரணைக்கு பயன்படுத்தும் வகையில் விரைவில் பயன்படுத்தப்பட உள்ள *e shakshya* செயலியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. இதன் செயல்பாடுகள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். புலன் விசாரணை நடைமுறைகளில் இதை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் குண்டர் சட்டத்தில் குற்றவாளிகளை கைது செய்வதில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது. இதே போல் குற்ற வழக்குகளில் விரைவில் நீதிமன்ற விசாரணை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்த அரசு வழக்கறிஞர்கள் , சட்ட ஆலோசனை தருவதில் திறம்பட செயல்பட்ட மாவட்ட காவல் அலுவலக சட்ட ஆலோசகர் ஆகியோருக்கும் சான்றிதழ்கள் வழங்கினார். முன்னதாக காவல்துறையின் வாகனங்களை எஸ்.பி. சுந்தர வதனம், ஆய்வு செய்தார்.

பினனர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் பெண் காவலர்களில் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாத காவலர்களில் ஓட்டுநர் உரிமம் பெற விருப்பமுடைய காவலர்கள் மொத்தம் 35 பேருக்கு கடந்த இரண்டு மாதமாக ஆயுதப்படை மைதானத்தில் வைத்து ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி முடித்த பெண் காவலர்களுக்கு ஓட்டுநர் உரிமத்தையும் சுந்தரவதனம் வழங்கினார்.

The post விசாரணை, வாக்குமூலம் பெறும் போது போலீஸ் எடுக்கும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்ய புதிய செயலி appeared first on Dinakaran.

Read Entire Article