
ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தன்னை எந்த வகையிலும் கொடுமை செய்யக்கூடாது என்று உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜி என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில், மனுதாரருக்கு எதிரான புகார் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது என்று கூறப்பட்டது. மனுதாரர் தரப்பு வக்கீல் எம்.டி.அருணன், "விசாரணை என்ற பெயரில் மனுதாரரை போலீசார் துன்புறுத்துகின்றனர்" என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "ஒரு புகார் மீது விசாரணை நடத்த விசாரணை அதிகாரிக்கு அதிகாரம் இருந்தாலும், அது பி.என்.எஸ்.எஸ். சட்டத்துக்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும். அதேநேரம், விசாரணை என்ற பெயரில் நடைபெறும் கொடுமையை கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது.
எனவே, புகார் குறித்து விசாரணைக்கு அழைக்கப்படும் நபர் அல்லது சாட்சி சொல்ல வரும் நபர் என்று யாரை விசாரணைக்கு அழைத்தாலும், பி.என்.எஸ்.எஸ். பிரிவு 179-ன்படி போலீசார் சம்மன் அனுப்பவேண்டும். அவ்வாறு நடைபெறும் விசாரணை குறித்த விவரத்தை பொது டைரி, ஸ்டேஷன் டைரி, வழக்கு டைரி உள்ளிட்ட ஆவணங்களில் குறிப்பிட வேண்டும். விசாரணை என்ற பெயரில் யாரையும் போலீஸ் அதிகாரிகள் கொடுமை செய்யக்கூடாது" என்று உத்தரவிட்டார்.