விக்னேஷ் சிவன் மறுத்துள்ள நிலையில் திருப்பம் புதுவை அரசு ஓட்டலை இயக்குனருடன் வந்தவர் விலை பேசினார்

4 weeks ago 6

புதுச்சேரி, டிச. 17: புதுச்சேரி அரசின் சீகல்ஸ் ஓட்டலை விலைக்கு கேட்கவில்லை என்று திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் மறுத்துள்ள நிலையில், அவருடன் வந்தவர் என்னிடம் நேரடியாக விலை குறித்து பேசினார் என சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் கடந்த வாரம் புதுச்சேரி வந்திருந்தார். அப்போது ஒரு கலை நிகழ்ச்சிக்கு புதுச்சேரியில் இடம்தேர்வு செய்வது தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை மரியாதை நிமித்தமாக சட்டசபையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது அரசு ஓட்டலை சொந்தமாக விக்னேஷ் சிவன், அமைச்சரிடம் விலை பேசியதாகவும் இதற்கு மறுத்துவிட்ட அமைச்சர் உடனே அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டதாகவும் தகவல் வெளியாகின. இந்த சந்திப்பின்போது உள்ளூர் சினிமா முக்கியஸ்தர்கள் சிலரும் உடனிருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் புதுச்சேரி அரசு ஓட்டலை விலை பேசினேனா? என்ற கேள்வியுடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் அமைச்சரை சந்தித்துவிட்டு வந்த பின்பு என்னுடன் வந்த உள்ளூர் மேனேஜர் ஒருவர் சந்தித்து சில விஷயங்கள் குறித்து கேட்டுள்ளார். அந்த விஷயங்கள் எனக்காக கேட்கப்பட்டதாக தவறுதலாக புரிந்து கொண்டு அதனை பரப்பி விட்டார்கள் என தெரிவித்திருந்தார். இவ்விவகாரம் தொடர்பாக புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சரிடம் நிருபர்கள் நேற்று கேட்டபோது, ‘இயக்குனர் விக்னேஷ் சிவன் புதுச்சேரியில் பலஇடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்காகவும் மற்றும் ஒரு இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான அனுமதி கேட்டும் என்னிடத்தில் வந்து பேசியிருந்தார். அரசின் சீகல்ஸ் ஓட்டலை இயக்குனர் விக்னேஷ் சிவன் நேரடியாக விலைக்கு பேசவில்லை.

அவருடன் வந்த உள்ளூர் நபர்தான் சுற்றுலாத்துறைக்கு சொந்தமாக கடற்கரையில் அரசு ஓட்டல் விற்பனைக்கு தர முடியுமா? இதுதொடர்பாக பேச்சு அடிபட்டு வருவதாக என்னிடம் கூறினார். அப்போதே நான் கண்டித்தேன். அரசின் சொத்தை யார் நினைத்தாலும் விற்க முடியாது. அப்படி யாராவது கூறினால் நம்ப வேண்டாம். இயக்குனர் தன்னிடம் பெரிய கலை நிகழ்ச்சி நடத்த இடம் பார்க்க வந்ததாக கூறினார். அதற்கு அரசின் 2 கலையரங்குகள் இருப்பதை சுட்டிக் காட்டினேன். யார் வேண்டுமானாலும் அரசு விதிக்குட்பட்டு வரிகளை செலுத்தி நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் என மட்டும்தான் அவரிடம் கூறினேன். அரசின் இடத்தை விற்பதற்கு புதுச்சேரியில் யாருக்கும் உரிமை இல்லை. குறிப்பாக புதுச்சேரியில் சொத்து முழுவதும் குடியரசு தலைவர் பெயரில் இருக்கிறது. இதனால்தான் ஒரு டெண்டர் விடும்போதுகூட குடியரசு தலைவரை அதில் சுட்டிக் காட்டி வருகிறோம்’ என்றார்.

The post விக்னேஷ் சிவன் மறுத்துள்ள நிலையில் திருப்பம் புதுவை அரசு ஓட்டலை இயக்குனருடன் வந்தவர் விலை பேசினார் appeared first on Dinakaran.

Read Entire Article