
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இதற்கிடையில், ஊட்டியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களையும், வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள சூழலில், நீலகிரிக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில், இ-பாஸ் சர்வரில் இன்று திடீரென சிக்கல் ஏற்பட்டதால், ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர் இ-பாஸ் எடுக்க முடியாமல் அவதியடைந்தனர்.
இதனால் ஊட்டி-கூடலூர் நெடுஞ்சாலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையோரம் அணிவகுத்து நிற்கும் சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து சர்வரில் ஏற்பட்ட சிக்கல் சரிசெய்யப்பட்டு, இ-பாஸ் எடுத்த சுற்றுலா பயணிகள் மேற்கொண்டு செல்வதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.