
சென்னை,
8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் வில் ஜாக்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அடுத்து 163 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வில் ஜாக்ஸ் 36 ரன்கள் அடித்தார். ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், இஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் மும்பை பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 7-வது ஓவரை சுழற் பந்துவீச்சாளர் ஜீஷன் அன்சாரி வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட ரிக்கெல்டன் அடிக்க அதனை அற்புதமாக கேப்டன் கம்மின்ஸ் கேட்ச் பிடித்தார். இதையடுத்து களத்தில் இருந்து ரிக்கெல்டன் வெளியேறினார்.
ஆனால், ஐதராபாத் கீப்பர் கிளாசன் பேட்ஸ்மேன் பந்தை அடிப்பதற்கு முன்பாக ஸ்டம்புக்கு முன் கைகளைக் கொண்டு வந்ததால் அதை நடுவர் நோபால் என்று அறிவித்தார். அத்துடன் அந்த பந்து நோபாலாக அறிவிக்கப்பட்டு ப்ரீஹிட் வழங்கப்பட்டது. இதையடுத்து ரிக்கெல்டன் தொடர்ந்து பேட்டிங் செய்தார். இந்த அவுர் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி விக்கெட் கீப்பர் தவறு செய்தால் பவுலர் என்ன செய்வார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "கீப்பரின் கையுறைகள் ஸ்டம்புக்கு முன்னால் வந்தால், அதை டெட்பால் என அறிவித்து விக்கெட் கீப்பருக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்!! அதற்கு நோ பால் மற்றும் ப்ரீ ஹிட் கொடுக்க கூடாது!! இதற்கு பந்துவீச்சாளர் என்ன செய்தார்? இது குறித்து நீங்கள் அனைவரும் யோசிக்க வேண்டும்!! நீங்கள் அனைவரும் என்ன நினைக்கிறீர்கள்???" என்று பதிவிட்டுள்ளார்.