விக்கிரவாண்டியில் நாளை தவெக மாநாடு தொண்டர்களுக்காக காத்திருப்பேன்: நடிகர் விஜய் அறிக்கை

3 weeks ago 4

சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாடு நாளை (27ம் தேதி) நடைபெறுகிறது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்தார். கட்சி முதல் மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் அக்.27ம் தேதி (நாளை) நடைபெறும் என்று அறிவித்திருந்தார். 83 ஏக்கர் பரப்பில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், தவெக தொண்டர்களுக்கு விஜய் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

அதில் விஜய் கூறுகையில், “நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் 3வது கடிதம் இது. மாநாடு நிகழப்போகும் தருணம், நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது. உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.

உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை. அத்திருவிழாவைக் கொண்டாடுவதற்காக, பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியைக் கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள். உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில் என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்’’ என தெரிவித்துள்ளார்.

* வாகனங்கள் சிரமமின்றி செல்ல போலீஸ் ஏற்பாடு
ஞாயிற்றுக்கிழமை மாநாடு நடைபெறும் நிலையில் தென் தமிழகத்தில் இருந்து சென்னை நோக்கி சிரமமின்றி வாகனங்கள் செல்லவும், சென்னையில் இருந்து தீபாவளி விடுமுறைக்காக முன்கூட்டியே தென் தமிழகத்தை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு மாற்று வழி போலீஸ் சார்பில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையிலிருந்து தென்தமிழகத்தை நோக்கி செல்லும் வாகனங்கள் திண்டிவனம், மயிலம், திருவக்கரை, திருக்கனூர், பனையபுரம் வழியாக தென் தமிழகத்திற்கும், தென் தமிழகத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் வழியாக சென்னை செல்லவும் போலீசார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post விக்கிரவாண்டியில் நாளை தவெக மாநாடு தொண்டர்களுக்காக காத்திருப்பேன்: நடிகர் விஜய் அறிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article