திட்டக்குடி: கள்ளநோட்டு அச்சிட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான வி.சிறுத்தை நிர்வாகி தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், சென்னையைச் சேர்ந்த கூட்டாளியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து போலி சான்றிதழ்கள், கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்த அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (39). வி.சிறுத்தை நிர்வாகியான இவரை அடிதடி வழக்கு தொடர்பாக விசாரிக்க அவருக்கு சொந்தமான கொட்டகைக்கு ராமநாத்தம் போலீசார் சென்றனர். போலீசை கண்டதும் ஒரு கும்பல் தப்பி ஓடிய நிலையில் அங்கு சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு கள்ளநோட்டு அச்சிட்டது தெரியவரவே, வாக்கி டாக்கி, லேப்டாப், ஏர்கன், பிஸ்டல் ஏர்கன், கவுண்டிங் மெஷின், பிரிண்டிங் மெஷின், காவலர் சீருடை, ஆர்பிஐ முத்திரை மற்றும் கார், லாரி உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர்.பின்னர் செல்வத்தின் டிரைவர்களான நவீன்ராஜ் (29), கார்த்திகேயன் (28) மற்றும் கள்ளக்குறிச்சி சக்திவேல் (26), அண்ணன், தம்பியான அரவிந்த் (30), அஜித் (24), மா.பொடையூர் வடிவேல்பிள்ளை (28) ஆகிய 6 பேரை கைது செய்தனர். பின்னர் கள்ளநோட்டு அச்சிட பயன்படுத்திய கொட்டகைக்கு பூட்டுபோட்ட போலீசார், முக்கிய குற்றவாளியான செல்வம் உள்ளிட்ட கும்பலை தொடர்ந்து தேடி வந்தனர்.
இதனிடையே தனிப்படை போலீசார் அதர்நத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அந்த நபர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். தீவிரவிசாரணையில் அவர், சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கமல்குமார் (53) என்பதும், சென்னை சேத்துப்பட்டு பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. மேலும் இவரது நெருங்கிய கூட்டாளியான பாபு என்பவர் மூலம் கள்ளநோட்டு முக்கிய குற்றவாளியான செல்வத்துடன் பழக்கம் ஏற்பட்டதும், செல்வத்திடம் கமல்குமார் சுமார் 50 லட்சம் ரூபாய் கொடுத்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.
இதுதவிர செல்வம் சென்னை வந்து செல்வதற்கு கமல்குமார் பயன்படுத்திய சொகுசு காரை செல்வத்திற்கு பாபு வாங்கிக் கொடுத்ததும், அதை செல்வம் பயன்படுத்தி வந்த நிலையில் சம்பவத்தன்று அதில் தப்பித்து சென்றதும் தொியவந்தது. சென்னை சென்ற செல்வம், பாபுவையும், கமல்குமாரையும், பெங்களூருக்கு வருமாறு அழைத்ததும், அதன்பேரில் இருவரும் மற்றொரு சொகுசு காரில் பெங்களூர் சென்று தொடர்பு கொண்டபோது ஐதராபாத்தில் இருப்பதாக கூறி கார்களை மாற்றிக் கொண்டதும் அம்பலமானது.
இதனையடுத்து கள்ளநோட்டு விவகாரத்தில் செல்வத்துக்கு உடந்தையாக இருந்ததாக கமல்குமார், மீது வழக்கு பதிந்த போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு சொகுசு கார், லேப்டாப், செல்போன், 5 போலி சான்றிதழ்களை பறிமுதல் செய்தனர்.
The post வி.சிறுத்தை நிர்வாகி தொடர்ந்து தலைமறைவு; கள்ளநோட்டு விவகாரத்தில் சென்னையை சேர்ந்தவர் கைது: போலி சான்றிதழ்கள், கார் பறிமுதல் appeared first on Dinakaran.