ஜ்வாலா மாலிநிகா க்ஷிப்த வஹ்நி ப்ராகாரா மத்யகா
நாம் தொடர்ந்து பண்டாசுர யுத்தத்தின் வர்ணனையைத்தான் பார்த்துக் கொண்டே வருகிறோம். இதற்கு முந்தைய நாமங்களில் அம்பிகையினுடைய மூன்று முக்கியமான ரதங்களைப் பார்த்தோம். அம்பிகையினுடைய சக்ர ராஜரதம், மந்த்ரிணியினுடைய மாதங்கியினுடைய கேய சக்ர ராஜ ரதம். தண்டினி வாராஹியினுடைய கிரிசக்ர ராஜரதம்.
இப்போது இந்த மூன்று ரதங்களை பார்த்ததற்குப் பிறகு, இப்போது நாம் பார்க்கப்போகும் ஜ்வாலா மாலிநிகா க்ஷிப்த வஹ்நி ப்ராகாரா மத்யகா… என்கிற இந்த நாமத்தில் அம்பிகையினுடைய சொரூபத்தைப் பற்றியும் தேவதையைப் பற்றிய ஒரு விஷயமும், பண்டாசுரனோடு போரிடும்போது இந்த தேவதையின் பங்கைப்பற்றியும் இந்த நாமம் பேசுகின்றது. இந்த தேவதையின் பெயர்தான் ஜ்வாலா மாலினி என்பதாகும். இது அம்பிகை யினுடைய ஒரு சொரூபமாகும்.
ஸ்ரீ வித்யா தத்துவப்படி பார்க்கும்போது, ஒவ்வொரு தேவதையும் அம்பிகையினுடைய ஒவ்வொரு சொரூபமாகத்தான் இருக்கும். தேவதைகள் என்றால் அது வேறு வேறு என்றெல்லாம் அர்த்தம் கிடையாது. அம்பிகையினுடைய சொரூபமேயாகும். ஆனால், அந்த சொரூபம் செய்யும் செயலிலும் பராக்கிரமத்திலும் வித்தியாசம் உண்டு. ஒரு இடத்தில் மந்த்ரிணீயாகவும், வேறொரு இடத்தில் வாராஹி என்கிற தண்டநாதாவாகவும், இப்போது ஜ்வாலா மாலினி என்கிற ரூபத்தில் வெளிப்படுத்திக் கொள்கிறாள். அந்த ரூபத்தைப் பற்றிய விஷயத்தைத்தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம்.
அந்த ரூபத்தைப்பற்றி நாம் இங்கு ஏன் பார்க்கப் போகிறோம் என்பதை முதலில் புரிந்து கொண்டு விடுவோம்.
சென்ற நாமங்களில் ரதங்களையெல்லாம் பார்த்தோம். இப்போது இந்த நாமமானது முக்கியமாக எதைக் குறிப்பிடுகிறதென்பதை பார்ப்போம். இப்போது ஒரு படையானது போருக்குப் போகிறதெனில், அப்போது அந்தப் போரில் அந்த சைந்நியத்திற்குள் அங்கங்களெல்லாம் இருக்கும். அதாவது ஒரு படையில் குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை, காலாட்படை என்றெல்லாம் இருக்கும்.
இது ஒருபுறம் இருக்கட்டும்.
ராஜாக்கள் காலத்திலிருந்து இப்போது இருக்கும் மிலிட்டரி வரை வைத்துக் கொள்ளுங்கள். நாம் பொதுவாக ஆங்கிலத்தில் defence forces… என்று சொல்வோம். Defence என்றாலே வெளியிலிருந்து வரும் தாக்குதல்களை தடுப்பதே ஆகும். இப்படி வரும் தாக்குதல்களை தடுக்கும் அளவிற்கு இந்த forces இருக்கிறதா என்பதே இங்கு முக்கியம். அதனால்தான் அதை defence என்று சொல்கிறோம். இந்த தாக்குதலை தடுப்பதுதான் இங்கு முக்கியம்.
நாம் ஒரு நாட்டின் தடுப்பிற்கே இவ்வளவு வலிமை உண்டெனில், அம்பிகையின் சைந்நியத்தில் எவ்வளவு defence இருக்கும். எவ்வளவு தனக்குத்தானே ஒரு பாதுக்காப்போடு அந்த சைந்நியம் இருக்குமென்பதை புரிந்து கொள்வது மிகவும் முக்கியம். அப்படி தனக்குத்தானே பாதுகாப்பாக அந்த சைந்நியம் இருப்பதைத்தான் இந்த நாமம் சொல்கிறது.
ஜ்வாலா மாலினி என்கிற தேவதையானது திதி நித்யா தேவதைகளில் பதினான்காவது திதியான சதுர்த்தசி திதிக்கு உரியவள் ஆவாள். ஸ்ரீ வித்யா சம்பிரதாயத்தில் ஜ்வாலாமாலினி பற்றி சொல்லும்போது, அக்னி சொரூபமாக இருந்து கொண்டு எல்லாவற்றையும் பாதுகாக்கக் கூடியவள். ஜ்வாலா மாலினி என்றாலே அக்னி ஜ்வாலைகளை யார் மாலையாக தரித்திருக்கிறார்களோ அவளே ஜ்வாலா மாலினி. அவள் அக்னிபோன்று நம்மைச் சுற்றி காக்கக் கூடியவளாக இருப்பதாலும், அவளுக்கு ஜ்வாலா மாலினி என்று பெயர்.
இப்போது பண்டாசுர வதத்திற்கு வரும்போது அம்பிகையானவள் ஜ்வாலா மாலினியை நோக்கி இந்த ஒட்டுமொத்த சைன்னியத்தையும் முழுமையாக பாதுகாக்க வேண்டுமென்று கட்டளையிட்டாள். அதை எப்படி காக்கிறாள் எனில் அக்னி ஜ்வாலையினாலேயே ஒரு கோட்டைபோல், பெரிய பிராகாரம்போல் அமைத்திருந்தால் எப்படியிருக்குமோ அதுபோல, இந்த அம்பிகையானவள் அக்னியினாலேயே ஒரு பெரும் சுவர் எழுப்பி இந்த சைந்நியத்தை காப்பாற்றுகிறாள். இந்த சக்தி சைந்நியத்தை காப்பாற்றுகிறாள். வெளியிலிருந்து வரக்கூடிய தாக்குதல்களை இது தடுக்கக் கூடியதாக இருக்கும். அதனால்தான் இதை நாம் defence என்று சொல்கிறோம்.
இப்போது பார்த்தது இந்த நாமாவினுடைய நேரடியான பொருள். இதற்கான தத்துவார்த்த பொருள் மற்றும் அத்யாத்மமான உட்பொருளையும் நாம் கொஞ்சம் பார்ப்போம் வாருங்கள்.
பொதுவாக ஸ்ரீவித்யா பூஜையை ஆரம்பிக்கும்போது சில விஷயங்கள் செய்வதுண்டு. முதலில் மாதங்கி என்கிற மந்த்ரிணீ ஸ்தானத்தில் இருப்பதால் அவளின் உத்தரவை பெற வேண்டும். அதற்குப் பிறகு, திரஸ்கரணி தேவியிடம் உத்தரவு வாங்க வேண்டும். அந்த தேவியானவள் திரையை விலக்கினால்தான் அம்பிகையை நாம் தரிசிக்க முடியும். இப்படியே ஒவ்வொன்றாக வரும்போது, ஓம் நமோ பகவதி ஜ்வாலா மாலினி… என்கிற மந்திரத்தை ஜபித்து, நமஸ்கரிக்க வேண்டும். பிறகு, அம்பிகையை நோக்கி, ‘‘நாங்கள் இங்கு பூஜை செய்யப் போகிறோம். அதற்கு எந்த இடையூறும் வராமல் இருக்க உன்னுடைய சக்தியினால் ஒரு அக்னியாலான ஒரு பிராகாரத்தை உருவாக்கி, ஒரு அக்னி கோட்டையை உருவாக்கி இந்த கோட்டையை காப்பாற்றிக் கொடும்மா…’’ என்று ஜ்வாலா மாலினியிடம் பிரார்த்திப்பார்கள். அதற்குப் பிறகு தட்சிணாமூர்த்தியிடமும் பைரவரிடமும் உத்தரவு வாங்கிக் கொண்டுதான் ஸ்ரீசக்ர பூஜை ஆரம்பிக்கும்.
இது ஸ்ரீவித்யா சம்பிரதாயத்தில் ஸ்ரீ சக்ர பூஜையை இப்படித்தான் தொடங்குவார்கள்.
இதே விஷயத்தைத்தான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஸ்ரீவித்யா பூஜையை தொடங்கும்போது, ‘‘அக்னிப் பிராகார விசிந்த்யா…’’ என்று சொல்லும்போது நிஜமாகவே அங்கு அக்னியால் ஒரு சுவர்போல, பிராகாரம்போல் அக்னி நான்கு பக்கமும் அவரைச் சூழ்ந்து கொள்ளுமாம். அவர் அந்த மந்திரத்தைச் சொல்லி தீர்த்தத்தை தெளித்தவுடனே அக்னி பிராகாரமே உருவாவதை சுற்றியுள்ள சிலர் பார்த்து ஆச்சரியமடைந்திருக்கின்றனர். அதற்கு நடுவே உட்கார்ந்து கொண்டுதான் ராமகிருஷ்ணர் பூஜையையே செய்வாராம். இதை இப்படி மிகச் சரியாக செய்யும்போது உங்களுக்கும் இதுபோன்று நிகழும் என்று காட்டிக் கொடுக்கிறார்.
இதுதான் வஹ்னி பிராகாரமும் ஜ்வாலா மாலினியினுடைய விஷயமும் ஆகும். இப்போது இந்த நாமத்தை மீண்டும் பாருங்கள். ஜ்வாலா மாலினிகா க்ஷிப்த வஹ்நி ப்ராகாரா மத்யகா… அந்த வஹ்நி (அக்னி) பிராகாரத்திற்குள் சைந்நியம் இருக்கிறது. அந்த சைந்நியத்திற்கு மத்தியில் அம்பாளினுடைய சக்ர ராஜ ரதத்திற்குள் அம்பாள் இருக்கிறாள். அவளே லலிதா மஹாதிரிபுர சுந்தரி.
இப்போது இந்த நாமாவானது ஒரு சாதகனுக்கு என்ன காண்பித்துக் கொடுக்கிறது என்று பார்ப்போம்.
இதற்கு முன்னர் நாம் பார்த்த மூன்று நாமங்களும் ஒரு அலைவரிசையை, ஒரு ஒழுங்கான விஷயத்தை அடுக்கடுக்காக சொன்னது. முதலில் யந்த்ரம், அடுத்து மந்த்ரம், மூன்றாவதாக தந்த்ரம் என்று பார்த்தோம். இப்போது இந்த யந்த்ரம், மந்த்ரம், தந்த்ரம் என்கிற மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது அந்த உபாசகனுக்கு அந்த உபாசனை சித்திக்கின்றது. அந்த இடத்தில் உபாசனா சித்தி ஏற்படுகிறது. குருநாதருடைய அனுக்கிரகத்தினால் இந்த மூன்றும் இணைந்து ஒரே நேர்க்கோட்டில் வரும்போது உபாசனை சித்திக்கின்றது.
அப்படி ஆகும்போது அவனுக்குள் என்ன உணருகின்றான் என்பதே இங்கு முக்கியம். குரு, தான் உபாசனை பண்ணக்கூடிய தேவதை, தன்னுடைய ஆத்மா என்று இந்த மூன்றுக்குள்ளேயும் எந்த பேதமும் இல்லாத அபேத உணர்வை, அபேத பாவனைக்கு வருகின்றான்.
ஈஸ்வரோ குருராத்மேதி மூர்த்தி பேத விபாகினே
வ்யோமவத் வ்யாப்த தேஹாய தக்ஷிணாமூர்தயே நமஹ
மூர்த்தி அளவில் அதாவது உருவத்தின் அளவில், நம்முடைய ஆத்மா வேறாகவும், குரு வேறாகவும், ஈஸ்வரன் வேறாகவும் பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது இந்த உபாசனை சித்திக்கும்போது குரு, தேவதை, ஆத்மா, என்று இந்த மூன்றுக்கும் இருக்கக்கூடிய அபேதத்துவம் சித்திக்கின்றது. பேதமற்ற நிலை சித்திக்கின்றது. அப்போது அந்த உபாசனா சித்தி அவனை எங்கு கொண்டு போகுமெனில், ஆத்ம ஞானத்தில் கொண்டுபோய் விடும்.
இப்போது இந்த உபாசனை சித்தித்த உடனேயே ஒரு ஞான ஸ்பூர்த்தி ஏற்படுகின்றது. ஒரு ஆனந்தம் ஏற்படுகின்றது. ஒரு ஜபம் செய்யும்போது நம்மை அறியாது ஒரு ஆனந்தம். ஒரு பூஜையை செய்யும்போது நம்மை அறியாது ஒரு ஆனந்தம். எதுவுமே இல்லாமல் சும்மா இருக்கும்போதே ஒரு ஆனந்தம். சத்சங்கத்தில் இருக்கும்போது ஒரு ஆனந்தம். நமக்குப் புரியாத விஷயங்கள் தானாகப் புரிவது. குரு ஒரு விஷயத்தை சொன்னவுடனே நமக்கு சட்டென்று spark ஆவது என்பது போன்ற அனுபவம் நேரும். இப்படி நமக்குள் தோன்றுகின்ற அனுபவங்களே உபாசனா சித்தியாகும். இந்த உபாசனா சித்தி எப்படி இருக்கிறதெனில் ஞான மயமாக இருக்கின்றது.
இந்த விஷயங்களெல்லாம் தெரியாமல் லௌகீகமாக இருந்தபோது, அஞ்ஞானத்தினுடைய கலப்பு நிறைய இருக்கும். இந்த உபாசனா சித்தி… நமக்குள் ஓங்க… ஓங்க… அஞ்ஞானமெல்லாம் விலக ஆரம்பித்து இது முழுமையான ஞானமயமாகி விடும்.
நம்முடைய சாஸ்திரத்தில் பொதுவாகவே ஞானத்தை ஞானாக்னி என்று சொல்வதுதான் வழக்கம். இந்த உபாசனா சித்தி ஞான மயமாக இருப்பதால் அதுவே ஒரு அக்னியாகிவிட்டது. அக்னி எப்படி எல்லாவற்றையும் பொசுக்கி பஸ்மமாக்குகிறதோ… அதுபோன்றுதான் இந்த ஞானாக்னியானது அஞ்ஞானத்தை பஸ்மமாக்குகின்றது. இதே அக்னியை நாம் பாதுகாப்பதற்கும் உபயோகப்படுத்தலாம். ஒரு இடத்தைச் சுற்றி ஒரு அக்னி இருக்கிறதெனில், அதைத் தாண்டி வேறெதுவும் உள்ளே வர முடியாது. வெளியிலிருந்து வரக்கூடியதை இந்த அக்னியானது நிறுத்தி விட்டு, உள்ளே இருக்கக் கூடிய விஷயத்தை பாதுகாக்கக் கூடிய விஷயமாக இந்த அக்னி இருக்கிறது.
இப்போது இந்த சாதகனுக்குள் அந்த ஞானாக்னி கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசிக்கத் தொடங்குகின்றது. அப்படி பிரகாசிக்கத் தொடங்கும்போது என்ன நடக்கிறதென்பதை கொஞ்சம் ஆழமாக புரிந்து கொள்வோம் வாருங்கள்.
ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் ஐந்து கோசங்கள் உண்டு. அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்றெல்லாம் உண்டு. இதையெல்லாம் ஆத்மா உள்ளது. இப்போது உபாசனா சித்தியினால் ஒவ்வொரு கோசத்திற்குள்ளும் குடைந்து குடைந்து ஞானாக்னி தனது பிரகாசத்தை கூட்டிக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு கோசத்திலேயும் அந்த ஞானமானது வியாபிக்க ஆரம்பிக்கிறது. இவனுடைய உள்ளே இருக்கக்கூடிய ஆனந்தமய கோசத்தில் தொடங்கி, வெளியே பார்க்கக் கூடிய ஸ்தூல சரீரம் வரைக்கும் இந்த அக்னியானது வியாபிக்கத் தொடங்கி, இந்த அக்னியே அவனுக்கு ஒரு பாதுகாப்பாக அமைகின்றது.
உதாரணமாக, மனோமய கோசத்தில் இந்த அக்னி வியாபித்திருக்கிறதெனில் என்ன ஆகும். மனதில் இருக்கக்கூடிய தேவையற்ற விகல்பங்களெல்லாம் பொசுங்கிப்போய், வெளியிலிருந்து மனதை எதுவும் பாதிக்க முடியாது. மனதிற்கு ஒரு பாதுகாப்பு ஏற்பட்டு விடுகின்றது. நம்மை ஒரு நாளைக்கு எத்தனை நூறு எண்ணங்கள் தாக்கி விட்டு நம்மை நிலை குலைய வைக்கின்றன என்பதை உணர்ந்தால், இந்த ஞானப் பிரகாசம் நமக்குள் உதயமாக வேண்டுமென்று பிரார்த்திப்போம். அப்போதுதான் ஜ்வாலாமாலினி என்ன செய்கிறாள் என்று புரியும்.
இதற்குப் பிறகு பிராணமய கோசத்தை வியாபிக்கும்போது பிராணனுக்கு ஒரு பாதுகாப்பு ஏற்பட்டு விட்டது. அப்போது பிராணனானது தேவையற்று வீணாகாது. யோக மார்க்கத்தில் அந்தப் பிராணனை அவனால் திருப்ப முடியும். அதற்கடுத்து அன்னமய கோசத்திற்கு ஒரு பாதுகாப்பு ஆகும்போது என்ன ஆகின்றதெனில், அன்னமய கோசத்தில் இருக்கக் கூடிய தேவையற்ற விஷயங்கள், அசுத்தங்கள் அங்கு பொசுங்கிப் போகின்றன. கர்ம வினையினால் ஒரு நோய் வந்தால்கூட, இந்த உபாசனா சித்தியினால் அந்த நோய் குணமாகிறது. ஆரோக்கியம் கூடுகின்றது. இப்படி ஒவ்வொரு கோசங்களிலும் வியாபித்து அதுவே அவனுக்கு அரணாக, பாதுகாப்பாக இருக்கக் கூடிய விஷயத்தையே இந்த நாமம் நமக்கு காண்பித்துக் கொடுக்கிறது.
அதனால்தான் வஹ்நி பிராகார மத்யகா…. என்பதில் நமக்குள் இருக்கும் ஒவ்வொரு கோசங்களும் ஒவ்வொரு பிராகாரம் ஆகும். அதில் இந்த ஜ்வாலா மாலினி என்கிற அக்னி சொரூபமான அம்பாள் ஒவ்வொரு கோசங்களையும் பிரகாசிக்க வைத்து நமக்கு பெரிய பாதுகாப்பை உருவாக்குகிறாள். அதனால்தான் உபாசனை என்று சொன்னாலும், ஒருவரை நோக்கி உபாசகர் என்று சொன்னாலுமே அவரை நோக்கி எந்த எதிர்மறை சக்தி வந்தாலும் அவர் வணங்கும் உபாசனா தெய்வமே அவரை காத்து அரணாக நிற்கும். Negative force எதுவும் அவரை தொடாது என்று சொல்வார்கள். இப்படி ஒரு பாதுகாப்பு வளையத்தை உண்டாக்குபவளே ஜ்வாலா மாலினி ஆவாள்.
இங்கு இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில், வெளியிலிருந்து வரும் எதிர்மறை சக்தி வருவதை தடுக்கின்றது. அதேசமயம் உள்ளே இருக்கக் கூடிய நேர்மறையான சக்தியின் நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
புராணத்தில் பண்டாசுர வதத்தின்போது எப்படி இப்படிப்பட்ட சைந்நியத்தை அமைத்துக் கொண்டாளோ, அதேபோல இங்கு ஒரு சாதகனின் அத்யாத்ம வாழ்க்கையில் அவன் முன்னேறும் போதும் அம்பாளே இம்மாதிரி ஒரு பாதுகாப்பை அமைத்துக் கொடுப்பாள்.
இந்த நாமத்தை சொல்வதால் அவனை அறியாமல் அம்பாளே ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி விடுவாள். சாதாரண லௌகீக வாழ்க்கையில் ஏற்படுகின்ற திருஷ்டி, பொறாமையான எண்ணங்களால் ஏற்படும் பாதிப்பு, மற்றவர்களின் தேவையில்லாத வார்த்தைகள், மற்றவர்களின் செயல்கள், இவ்வளவு ஏன் நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது எங்கு, என்ன எதிர்மறை சக்திகள் தீய சக்திகள் இருக்குமென்று யார் அறிவார்கள். நாம் அடிக்கடி சொல்கிறோமே security, secured life போன்றவற்றையே இந்த நாமம் அளிக்கின்றது.
இப்படியாக தினசரி வாழ்வில் தொடங்கி ஆழமான ஆத்மீக மயமான வாழ்வு வரைக்கும் அம்பாள் பாதுகாப்பான அரணாக நின்று நம்மை காக்கின்றாள். இதைத்தான் இந்த நாமம் காட்டிக் கொடுக்கின்றது.
இதற்கான கோயிலாக திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரரைச் சொல்லலாம். ஏனெனில், அக்னியே பூஜித்த தலமாகும். இத்தல ஈசனுக்கு கோணப்பிரான் என்றும் அம்பாளுக்கு கருந்தார்குழலி என்றும் திருநாமமுண்டு.
இதைத்தவிர புகலூர் என்று இந்த ஊரின் பெயரை வந்துள்ளதை பார்க்கலாம். புகல் என்றால் அடைக்கலமாதல், சரண் புகுதல் என்றெல்லாம் அர்த்தம் வரும். அதனாலேயே இந்த ஈசனுக்கு சரண்யேஸ்வரர் என்றும் பெயர் வந்தது. மேலும், இந்த தலத்தில் பாணாசுரன் என்பவன் லிங்கத்தை பெயர்த்தெடுக்க முயற்சித்து முடியாமல் அங்கேயே அவரை பூஜித்து மோட்சம் அடைந்தான்.
இந்த அக்னீஸ்வரரை பூஜிப்பதற்காக வேண்டி அந்த சிவலிங்கத்தைச் சுற்றி மதிற் சுவர் ஒன்றை எழுப்பி அகழி போன்ற அமைப்பை உருவாக்கியிருப்பது சிறப்பு அமைப்பாகும். இதனால் சிவபூஜைக்கு ஊறு நேராத வண்ணம் அந்த அகழியே, இன்னும் சொல்லப் போனால் அக்னியால் உருவான சுவரே இங்கு பூஜித்தோரை காத்தது.
இந்தத் தலமே அப்பர் ஐக்கியமான தலமும் ஆகும். அப்பர் இறுதியாக இத்தல ஈசனோடுதான் கலந்தார். இந்தத் தலம் நாகப்பட்டினத்திற்கு அருகே அமைந்துள்ளது.
(தொடரும்)
The post வாழ்வு முழுவதும் பாதுகாப்பை அருளிடும் நாமம் appeared first on Dinakaran.