சடையன் ஒரு ஆடு வியாபாரி. ஆட்டுக் குட்டிகளை விலைக்கு வாங்கி விற்று வந்தான். ஒருநாள் தன் பன்னிரண்டு வயது சிறுவனிடம் பணம் கொடுத்து, பக்கத்து கிராமத்திற்கு சென்று அவசரமாக ஒரு ஆட்டுக்குட்டி வாங்கி வரும்படி அனுப்பினான். சிறுவன் ஆட்டுக் குட்டி ஒன்றை வாங்கி ஒரு சிறு சாக்குப்பைக்குள் போட்டுக் கொண்டான். அவன் வரும் வழியில் கால் பந்தாட்டம் நடந்துகொண்டிருந்தது. பையன், ஆட்டுக்குட்டி பையை கீழே வைத்துவிட்டு, விளையாட்டை ரசிக்க ஆரம்பித்தான். தந்தை, அவசரமாக அனுப்பிய கடமையை மறந்தான். அங்கிருந்த மற்றோரு குறும்புச் சிறுவன், அந்தப் பையினுள்ளிருந்த ஆட்டுக் குட்டியை எடுத்துவிட்டு, அதற்குப்பதில் ஒரு நாய்க்குட்டியைப் போட்டுவிட்டான்.சிறுவன், ஆட்டுக்குட்டிப் பையை தந்தையிடம் கொடுத்தான். பைக்குள் நாய்க்குட்டி இருந்தது. தந்தைக்கு அதீத கோபம் வந்தது. மகனை திட்டி அடித்தார். மீண்டும் சென்று ஆட்டுக் குட்டியை வாங்கி வரும்படி அனுப்பிவிட்டார். சிறுவன் செல்லும் வழியில் இன்னும் பந்தாட்டம் நடந்து கொண்டிருந்தது. பையன் பழையபடியே பையைக் கீழே வைத்துவிட்டு பந்து விளையாட்டைப் பார்க்க ஆரம்பித்தான்.
அதே குறும்புக்காரச் சிறுவன், நாய்க்குட்டியை எடுத்துவிட்டு மீண்டும் ஆட்டுக் குட்டியை போட்டுவிட்டான். பந்து விளையாட்டின் ஒரு ஆட்டம் முடிந்ததும் சிறுவன் பையை எடுத்துச் சென்று ஆடு வியாபாரியிடம் பையைக் கொடுத்து, தன்னை ஏமாற்றி விட்டதற்காக கோபித்து, மாற்றித் தரும்படி முறையிட்டான். வியாபாரி பையை வாங்கித் திறந்து பார்த்தபோது ஆட்டுக்குட்டி இருப்பதைக் கண்டு சிறுவனின் மீது எரிந்து விழுந்தான். சிறுவன் அழுகையோடு திரும்பிவந்தான். வரும் வழியில் மீண்டும், பந்து விளையாட்டு நடந்துகொண்டிருந்தது. சிறுவன் மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். அந்த குறும்புக்காரப் பையன், இந்த முறையும் ஆட்டுக்குட்டியை எடுத்துவிட்டு, நாய்க் குட்டியைப் போட்டுவிட்டான். ஆட்டம் முடிந்ததும் சிறுவன் பையைத் தூக்கிக் கொண்டு ஓடினான். பைக்குள் நாய்க்குட்டி இருப்பதைக்கண்ட தந்தைக்கு பொல்லாத கோபம் வந்து, மகனை நன்கு அடித்துவிட்டார்.
பையனுக்கு எங்கு தவறு நடந்தது என்று தெரியவில்லை. நாய்க்குட்டியைப் பார்த்து பரிதாபமாகச் சொன்னான். `‘ஏய், நாய்க்குட்டி! நீ நாய்க் குட்டியாகவே இரு அல்லது ஆட்டுக்குட்டியாய் இரு, இரட்டை வேடம் போடாதே’’ என்றான். இறைமக்களே, நாம் எப்படி இருக்கிறோம்? ஆலயத்தில் ஆட்டுக்குட்டியைப் போன்று, காட்சி தரும் சிலர் தங்கள் வீட்டிலும், வீதியிலும் சுபாவம் மாறிய நபராக மாறி விடுகின்றனர். நீங்கள் நீங்களாக இருக்க வேண்டுமென்பதே தேவனுடைய விருப்பம். சிந்தையிலும் சுபாவத்திலும் மாற்றம் இல்லாத ஒருவர், தன்னை கடவுளுடைய பிள்ளை என்றும், கடவுளுக்கு நெருக்கமானவர் என்றும் அடையாளம் காண்பிப்பது வேஷம் மாறிய ஆட்டுக்குட்டியைப் போன்றுதானே. எனவே, வழியில் வரும் ஆபத்துகளில் கவனமாயிருங்கள். சிறுவன் தனக்குக் கொடுத்த பணியைச் சரிவரச் செய்யவில்லை. வேலையைவிட்டு வேடிக்கை பார்த்ததன் விளைவாகவே வேதனையிலும் சோதனையிலும் அடிபட நேர்ந்தது. ‘‘தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்’’ (நீதி.22:29) என வேதம் கூறுகிறது. எனவே உங்கள் கடமைகளில் கவனமுள்ளவர்களாகவும், எச்சரிக்கையுள்ளவர்களாகவும் இருப்பது காலத்தின் அவசியமாகும்.
– அருள்முனைவர்: பெ.பெவிஸ்டன்
The post வாழ்க்கைப் பயணத்தில் வனமாயிருங்கள் appeared first on Dinakaran.