வாலிபருடன் கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் செப்டிக் டேங்கில் வீசி 2 குழந்தைகள் கொலை: கைதான தாய் பரபரப்பு வாக்குமூலம்

2 weeks ago 3

வாழப்பாடி: வாலிபருடன் கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் 2 குழந்தைகளை செப்டிக் டேங்கில் வீசி கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அத்தனூர்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் விஜயகுமார் (35), கூலித்தொழிலாளி. இவரது மனைவி இளவரசி (32). இவர்களுக்கு விக்னேஷ் (6), சதீஷ்குமார் (3) என 2 குழந்தைகள் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே செப்டிக் டேங்கில் குழந்தைகள் இருவரும் தவறி விழுந்து விட்டதாக கூறி இளவரசி அலறினார்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று, செப்டிக் டேங்கில் விழுந்து கிடந்த 2 குழந்தைகளையும் மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தைகள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதனிடையே, இளவரசி தகாத உறவு விவகாரத்தில், தன்னுடைய 2 குழந்தைகளையும் செப்டிக் டேங்கில் வீசி கொலை செய்து விட்டதாக, விஜயகுமாரின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இதனையடுத்து, இளவரசியை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் 2 குழந்தைகளையும் செப்டிக் டேங்கில் வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து இளவரசி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: எனக்கும், வீட்டின் அருகே வசிக்கும் ஒரு வாலிபருக்கும் தகாத உறவு இருந்தது. இதையறிந்த எனது கணவர் விஜயகுமார், தகாத உறவை கைவிடும்படி கூறி என்னை கண்டித்தார். இதன் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம், இதுதொடர்பாக மீண்டும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அப்போது, என்னை கொல்லாமல் விட மாட்டேன் என கூறி விட்டு, கணவர் வெளியே சென்று விட்டேன். இதனால் நான் ஆத்திரம் அடைந்து குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முடிவு செய்தேன். பின்னர், வீட்டின் அருகில் உள்ள செப்டிக் டேங்கில், 2 குழந்தைகளையும் வீசினேன். பின்னர், நானும் டேங்கின் உள்ளே குதிக்க முயன்றேன். திடீரென பயத்தில் அலறினேன். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து என்னையும், குழந்தைகளையும் மீட்டனர். ஆனால், அதற்குள் குழந்தைகள் உயிரிழந்து விட்டனர். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, இளவரசியை போலீசார் கைது செய்தனர்.

The post வாலிபருடன் கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் செப்டிக் டேங்கில் வீசி 2 குழந்தைகள் கொலை: கைதான தாய் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Read Entire Article