நேர்மை எனும் வலிமையான ஆயுதம்!

6 hours ago 2

நன்றி குங்குமம் டாக்டர்

அகமெனும் அட்சயப் பாத்திரம்

மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்

நேர்மையாக இருந்த போதிலும் பிறர் அதற்கு மதிப்பு கொடுக்காமல் நம்மை ஏமாற்றும்பொழுது அதனை ஒரு பாடமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏமாற்றம் நம்முடைய நேர்மையினால் அல்ல தவறான நபரை நம்பியதனால்தான் என்று புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சம்பவத்தை வைத்து நேர்மையில் சமரசம் (Compromise) செய்துகொள்ள வேண்டாம். நேர்மையின் பயணம் நிரந்தரமானது. அது தரக்கூடிய மனநிறைவும், பொருள் பொதிந்த வாழ்வின் முன்னேற்றமும் உடனடியாக கணிக்க இயலாது. நேர்மையின் பாதை கடினமாக இருந்தாலும் அதன் நீண்ட காலப் பயன்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நன்மையைத் தரும் என்று நம்ப வேண்டும்.

நேர்மையாளர்களை பிழைக்கத் தெரியாதவன், இளிச்சவாயன் என்றுதான் சொல்வார்கள். செயல்வழி மட்டுமல்லாமல் வாய்மொழியிலும் நேர்மையாளர்கள் வதைப்படுவது அதிகம். இப்படியான தவறான மனிதர்களின் வார்த்தைகளால் குழம்பி, “நேர்மையற்றவர்களும் நன்றாகத்தானே வாழ்கிறார்கள்?” என்ற தவிப்பின் கேள்வி நம்மைத் தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கும். இதனை சரியான புரிதலோடு, முறையாகக் கையாளுவது அவசியம். இல்லையெனில் பல்வேறு உளவியல் சிக்கல்கள் தோன்றக்கூடும். கடுமையான சூழல்களில் . பொறுமையைக் காக்க வேண்டும். தற்காலிக நற்பெயரைக் காட்டிலும், மனிதத் தன்மைக்கான மனநிறைவே மிக முக்கியம்.

நேர்மையான வெளிப்படுத்தன்மையோடு கலந்துபேசும்போது பல சிக்கல்கள் தெளிவாக்கி விடும். பிரச்சனையைத் தீர்ப்பது எளிதாகிவிடும்.உதாரணமாக, மௌனராகம் திரைப்பட நாயகி திவ்யா, “நான் ஒரு சோம்பேறி. சமைக்க மாட்டேன்” என்று பலவற்றை நேர்மையாகக் கூறுவார். அவளுடைய வெளிப்படை தன்மையே நாயகனுக்கு அவளைப் பிடிக்கக் காரணமாகி விடும்.

காதல் தோல்வில் இருந்த அவளுக்கு நேர்மையே நல்ல வாழ்க்கையை புதிய மாற்றத்தைக் கொண்டு வந்து சேர்த்தது என அறிகிறோம் இல்லையா? எனவே, நேர்மையால் நல்ல மாற்றம் ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து ஒருபோதும் வேண்டாம். அப்போதைக்கு நீங்கள் முன்னிறுத்தும் நேர்மையான கருத்து பிறருக்குச் சூழலைக் கெடுப்பதாக, மகிழ்ச்சியைக் குலைப்பதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் அதுவே சரியான புரிதல்களோடு பல பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவியாக இருக்கும்.

தனிப்பட்ட உறவு முறைகளில் கூட விவாகரத்துகள் சண்டைகள் அதிகரித்து இருக்கிறது. இன்றைய நிலையில் பலரும் வெளிப்படையாகப் பேசாமல் நேர்மையாக தனக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை அல்லது தன் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பதை ஒப்புக்கொள்ளாமல் மறைக்கிறார்கள். இன்னொருவரை குற்றம் சுமத்துகிறார்கள்.அவராக விலகிச் செல்லட்டுமே, நமக்கு ஏன் கெட்டப் பெயர் என்று தந்திரங்களைச் செயல்படுத்தும் பொழுது அது இருவருக்கும் மனஉளைச்சலையே தரும்.நட்பாக பிரிந்து செல்லாமல் சண்டை போட்டுக் கொண்டே மிகுந்த மன அழுத்தத்தோடு பிரச்சனைகளோடே வாழ்வது எவ்வளவு வேதனை ? இப்படித்தான் நேர்மையின் குறைபாட்டினால் பல இனிய என்று ‘Toxic’ உறவுகளாக மாறிவிடுகின்றன.

தீமை செய்பவர்களே உறுதியாக இருக்கிறார்களே, நன்மையைத் தரும் நேர்மையைக் கொண்டவர்கள் எதற்கு அந்த நேர்மையிலிருந்து விலக வேண்டும் என்று யோசித்து நேர்மையை உறுதியாக கைக்கொண்டு விட்டால் எவராலும் உங்களை அசைக்கவே முடியாது. ஏனெனில் நேர்மையாளரை ஒன்று சரி இல்லை என்று எதிர்க்கும்போது நேரடியாக அதைச் செய்கிறார்கள். அதனை சரி செய்வதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார்.தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கும் அவர் கடைசியில், எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்த பிறகே கோபம் கொள்கிறார். ஆனால், நேர்மையாளரின் இந்தக் கோபம் பொது இடங்களில் ‘Embarassment’ செய்பவராகவே தோன்றவைக்கும். அதிக சமூகக் கோபம் கொள்ளும்போது நேர்மையாளரை பலரும் வெறுக்க கூடியவர்களாக ஆகிவிடும் நிலை மிகவும் பரிதாபமானது.

சரி என்று தெரிந்தும் அதனைக் கடைபிடிக்காமல் இருப்பது, தவறு என்று தெரிந்தும் தொடர்ந்து அதனைச் செய்து கொண்டே இருப்பது ‘Akrasia’ எனும் உளவியல் சிக்கலாகும். மேலும், உறவுகளைப் பேணுவதற்காக, அமைதியை நிலைநாட்டுவதற்காக என்று காரணங்களை அடுக்கி நேர்மைத்திறனைக் கைவிட்டு விடுவது மனிதனின் உயிர்ப்புத்தன்மையை அழித்துவிடும். நேர்மையில் தொடர்ந்து சமரசம் (Compromise) செய்வது நாளடைவில் ஜடம் போல, ரோபோ போல நம்மை மாற்றிக் கொள்வதாகும். மனதில் அழுத்தி (Supress) வைக்கும் வெளிப்படுத்தாத கோபம், எதிர்ப்புணர்வுகள் தீவிர தனிமை, உளவியல் கோளாறுகளைக் கொண்டு வரலாம் என்பதை நினைவில் வைப்போம்.

அதேபோல, அதீத நேர்மையும் ஆபத்து தரக்கூடியதே. இதனை பல திரைப்படங்களில் நாம் பார்த்திருக்கலாம். சிகப்பு ரோஜாக்கள், நான் சிகப்பு மனிதன், ஜென்டில்மேன், இந்தியன், அந்நியன் போன்ற தமிழ்ப் படங்களை எடுத்துக் கொள்வோம். அதீத நேர்மையாளர்களாக இருந்து சமூகமும், உறவுகளும் அவர்களின் நேர்மைக்கு பரிசாக ஏமாற்றங்களை கொடுக்கும் பொழுது அவர்கள் மனமுடைந்து நேர்மைக்கு எதிரான இச்சமூகத்தை பழிவாங்குகிறேன் என்று சமூக விரோதிகளாக மாறி விடுவார்கள். எனவே, நல்ல வாழ்வியல் பண்பு என்றாலும் நேர்மையிலும்கூட ஒரு அளவுகோல் வேண்டும் .தனக்கும் பிறருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தாத சமநிலைத்தன்மையை (Balancing) பராமரிப்பது வேண்டும்.

கோவிலில் ஏற்கனவே மணிகணக்கில் காத்திருப்பவர்களைத் தாண்டி பணம் கொடுத்து முன்னே சென்று விடுவது, பொது இடங்களில், சாலைகளில் விதிகளை மீறுவது, தான், தன் குழந்தை, தன் குடும்பம் மற்றும் தன்னைச் சார்ந்தவர்களுககே எங்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்றே பலரும் சுயநலத்தோடு செயல்படுகின்றனர். இவ்வாறு நாம் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்வில் பல இடங்களில் நேர்மையில் சமரசம் செய்து கொண்டே போகிறோம்.இத்தகு தவறுகளுக்குப் பலரும் துணை போவதால் நம் சமூகத்தின் நேர்மைதிறன் பாதிக்கப்படுகிறது என்பதைப் பொறுப்புணர்வோடு உணர வேண்டும். அவரவர் நேர்மைத்திறனை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

“நேர்மையாக இருப்பது உங்களுக்கு நிறைய நண்பர்களைப் பெற்றுத் தராது. ஆனால், சரியான நபர்களை உங்களிடம் நிச்சயம் கொண்டு வந்து சேர்க்கும்” – என்கிறார் புகழ் பெற்ற ஆங்கிலப் பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளரான ஜான் லெனோன். ஆம்.நேர்மையே பலம். வழக்கொழிந்து வரும் நேர்மைப் பண்பை மீட்டெடுப்போம். அடுத்த இதழில் – சமூக விரோத ஆளுமைக் கோளாறு ( Anti – Social Personality Disorder) மற்றும் அதன் விளைவுகள் குறித்து விரிவாகப் பேசுவோம்.

The post நேர்மை எனும் வலிமையான ஆயுதம்! appeared first on Dinakaran.

Read Entire Article