வாலாஜாபாத்: வாலாஜாபாத் சுற்று வட்டார பகுதிகளில் தார்ப்பாய் இன்றி செல்லும் குவாரி லாரிகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் இங்கு 15 வார்டுகளில், இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், வாலாஜாபாத் சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் உள்ளவர்கள் வாலாஜாபாத் வந்துதான் இங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், சுங்குவார்சத்திரம், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், வாலாஜாபாத் அடுத்த திருமுக்கூடல், மதூர், பழையசீவரம், சங்கராபுரம், ஆர்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல்குவாரிகள், சவுடு மண் குவாரி செயல்படுகின்றன. இங்கிருந்து லாரிகள் மூலம் ஜல்லிகற்கள், எம் சாண்ட் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிக்காக லாரிகள் மூலம் தாம்பரம், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டுமெனில் வாலாஜாபாத் வந்துதான் இங்கிருந்து செல்ல வேண்டும்.
இந்த சூழ்நிலையில் இந்த பகுதி வழியாக வரும் நூற்றுக்கணக்கான லாரிகளில் போக்குவரத்து விதியின்படி தார்பாய் போட்டு செல்ல வேண்டும். இந்த தார்ப்பாய் முறைப்படி எந்த லாரிகளும் போட்டு செல்வதில்லை.
இதனால், லாரிகளின் பின் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும் சாலையில் செல்லும் பொழுது கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதிலிருந்து சிதறும் மண்கள் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் பட்டு விபத்துக்குள்ளாகும் சூழ்நிலையும் நாள்தோறும் நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் வட்டார போக்குவரத்து துறையினரும் அல்லது வாலாஜாபாத் காவல் துறையினரோ இதுபோன்று தார்ப்பாய் இன்றி செல்லும் லாரிகள் மீது எந்தவித எச்சரிக்கையும் அல்லது வழக்கும் பதிவு செய்வதில்லை. இதனாலேயே இந்த லாரி ஓட்டுனர்கள் அலட்சியப் போக்கில் வாகனத்தை ஓட்டி செல்கின்றனர். இந்த சூழ்நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வாலாஜாபாத் வழியாக தார்ப்பாய் இன்றி செல்லும் லாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்துகின்றனர்.
The post வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதியில் தார்ப்பாய் இன்றி ஜல்லி கற்கள் ஏற்றி செல்லும் குவாரி லாரிகள்: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.