வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தில் நடந்த மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் எழிலரசன் எம்எல்ஏ கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்தூர், கரூர், சிங்காடிவாக்கம், அத்திவாக்கம், ஆலப்பாக்கம், ஆட்டுப்புத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்து கொண்டு, தமிழக அரசின் நான்காண்டு சாதனை திட்டங்கள் குறித்து பேசினார். மேலும் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் கிராமப்புற மாணவர்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்களை எடுத்துரைத்தார். மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் வரும் 15ம் தேதி நடைபெறும் முகாமில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்றார். தொடர்ந்து குறை கேட்பு முகாமில், கிராம மக்கள் இலவச வீட்டு மனை, வீட்டுமனை பட்டா இணைப்பு, மழைநீர் வடிகால்வாய், மின் விளக்கு, சாலை வசதி, குளம் சீரமைப்பு, அரசு பேருந்து இயக்கம், உடற்பயிற்சி கூடம், விளையாட்டு திடல், பள்ளிகளுக்குக் கூடுதல் வகுப்பறைகள், அங்கன்வாடி மையம், நியாய விலைக் கடை உள்பட ல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ எழிலரசன், அலுவலர்களிடம் பரிந்துரைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர்.கே.தேவேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜலட்சுமி குஜராஜ், ஒன்றிய செயலாளர் படுநெல்லி பி.எம்.பாபு, ஒன்றிய கவுன்சிலர் லோகு தாஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் குமார், சுரேஷ்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் ஒன்றிய, மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post வாலாஜாபாத் ஒன்றியத்தில் மக்கள் குறை கேட்பு கூட்டம்: எழிலரசன் எம்எல்ஏ மனுக்கள் பெற்றார் appeared first on Dinakaran.