
மும்பை,
ஜூனியர் என்.டி.ஆர் தற்போது பாலிவுட்டில் 'வார் 2' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் அவர் இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு 'வார் 2' படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.
பாலிவுட்டின் முன்னணி சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவர் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் 'வார் 2'. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ஹிருத்திக் ரோஷனுடன் டைகர் ஷ்ராப் மற்றும் வாணி கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
அதனையடுத்து, யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் 'வார் 2' படத்தை தயாரித்துள்ளது. இந்தப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் மீண்டும் மேஜர் கபீர் தலிவாலாக நடித்துள்ளார். 'பிரம்மாஸ்திரா' பட இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கும் இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "'வார் 2' டீசருக்கு நீங்கள் கொடுக்கும் வரவேற்புக்கு நன்றி. பட ரிலீஸுக்கு காத்திருக்கிறேன். என் திரைப் பயணத்தில் ஒவ்வொரு முறையும் நான் பின்னால் திரும்பிப் பார்க்கும்போதெல்லாம் முதலில் என் நினைவுக்கு வருவதே ரசிகர்கள்தான்" என மிகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.