வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல், கொல்லிமலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

3 months ago 11

*அருவிகளில் குளித்து உற்சாகம்

பென்னாகரம் : வாரவிடுமுறையையொட்டி, ஒகேனக்கல் மற்றும் கொல்லிமலையில் நேற்று திரண்ட சுற்றுலா பயணிகள், அருவியில் குளித்தும், குடும்பத்தினருடன் பரிசல் சவாரி செய்தும் உற்சாகமடைந்தனர்.தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வார விமுறையையொட்டி நேற்று தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஏரளாமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். காலை முதலே கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வந்தனர்.

அவர்கள் அங்குள்ள மெயினருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர், பரிசலில் சவாரி சென்று அருவிகளின் அழகை கண்டு ரசித்தனர். முதலை பண்ணை, மீன்காட்சியகம் மற்றும் தொங்குபாலத்தில் சென்று இயற்கை காட்சிகளை கண்டுகளித்தனர்.

நீண்ட நாட்களுக்கு பின், நேற்று திரளான சுற்றுலா பயணிகள் வந்திருந்ததால், மசாஜ் தொழில் ஈடுபட்டவர்கள், சமையல் தொழிலாளர்கள் மற்றும் பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர். மீன் விற்பனை நேற்று அதிகரித்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்திருந்ததால், பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமான கொல்லிமலையில், பகலில் மிதமான வெயிலும், இரவில் குளிரும் நிலவி வருகிறது. காலையில் சில்லென்று குளிர் காற்று வீசுகிறது. அதிகாலை முதல் 10 மணி வரை மலைப்பாதையில் பனிமூட்டம் நிலவுகிறது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், விடுமுறை தினமான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து டூவீலரில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். மிதமாக தண்ணீர் கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்அருவி, சினி பால்ஸ், சந்தனபாறை அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

அங்குள்ள அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், மாசி பெரியசாமி கோயில்களில் சாமிதரிசனம் செய்து விட்டு, தாவரவியல் பூங்கா, சிக்குப்பாறை காட்சிமுனையத்தை சுற்றி பார்த்தனர்.

பின்னர், வாசலூர்பட்டி ஏரியில் குடும்பத்தினர் குழந்தைகளுடன் படகு சவாரி செய்தனர். மாலை வீடு திரும்பும் போது சோளக்காடு, தெம்பளம், திண்டு பகுதிகளில் உள்ள பழச்சந்தையில் மிளகு, தேன், அன்னாசி, கொய்யா, மலை வாழைப்பழம், கமலா ஆரஞ்சு, பலா உள்ளிட்டவற்றை வாங்கி சென்றனர்.

The post வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல், கொல்லிமலையில் திரண்ட சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article