ஈரோடு: அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்று கருதியவன் நான். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையோடு இருக்கும் என்னை சோதித்துப் பார்க்காதீர்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: நான் பல்லாண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். பல தலைவர்களை சந்தித்துள்ளேன். என்னை யாரும், எதிலும் சிக்கவைக்க முடியாது.எம்ஜிஆர், ஜெயலலிதா பாதையில் செல்லும் எனக்கு, அவர்கள்தான் வழிகாட்டிகள். அதிமுக தொடங்கப்பட்டபோது நான் சாதாரண தொண்டன். எனக்கு பொருளாளர் பதவியை வழங்கி, பொதுக்குழுவை நடத்துமாறு கூறியவர் எம்ஜிஆர். அவரது உத்தரவின் பேரில் நாங்கள் பச்சை குத்திக் கொண்டோம்.எம்ஜிஆருடன் 14 முறை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். கிராமம் வாரியாக அத்தனை நிர்வாகிகள் பெயரும் எனக்குத் தெரியும்.