*விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
விழுப்புரம் : வானூர் அருகே வீதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை வீட்டிற்கு அழைத்துச்சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கீழ்கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(56).
கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி அதேபகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி வீதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, வெங்கடேசன் அந்த சிறுமியை தன்வீட்டிற்கு அழைத்துசென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். வீதியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை காணவில்லையே என்று பதறிய அவரது பெற்றோர் ேதடிப்பார்த்தபோது வெங்கடேசன் வீட்டின் அருகே அந்த சிறுமி அழுதுகொண்டிருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து அந்த சிறுமியிடம் பெற்றோர் எதற்காக அழுதுகொண்டிருக்கிறாய் என்றுகேட்டபோது நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் கிளியனூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி வினோதா நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட வெங்கடேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார். தொடர்ந்து சிறைதண்டனை விதிக்கப்பட்ட வெங்கடேசன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
The post வானூர் அருகே வீட்டுக்கு அழைத்துச்சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை appeared first on Dinakaran.