வானிலை அறிவிப்புகள் மேலும் துல்லியமாக இருக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

4 weeks ago 7

சென்னை,

வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் நேற்று காலை பல இடங்களில் கனமழை கொட்டியது.

இதனால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியது. தேங்கிய மழைநீரை அகற்றுவதற்காக தமிழக அரசின் அனைத்து துறைகளும் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன. இதற்கிடையில் சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் இன்று வானிலை ஆய்வு மையம் சார்பில் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. சில இடங்களில் மழை பெய்யவில்லை.

இந்த நிலையில், வானிலை ஆய்வு மைய அறிவிப்புகள் மேலும் துல்லியமாக இருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "சென்னைக்கு இன்று அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்டை' வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. ஆனால், இன்று மாலை வரை ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை. அரசும், பொதுமக்களும் தயாராக இருக்கும் வகையில் வானிலை முன்னறிவிப்புகள் மேலும் துல்லியமாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article