வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை கிராமத்தில் எருது விடும் விழா கோலாகலம்

3 hours ago 1

*எம்எல்ஏக்கள் தொடங்கி வைத்தனர்

வாணியம்பாடி : வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை கிராமத்தில் நேற்று எருது விடும் விழா கோலாகலமாக நடந்தது. விழாவை எம்எல்ஏக்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம், கொத்தக்கோட்டை கிராமத்தில் திரவுபதியம்மன் மற்றும் மயிலார் பண்டிகையை முன்னிட்டு 70ம் ஆண்டு எருது விடும் விழா நேற்று கோலாகலமாக நடந்தது.

முன்னதாக வாணியம்பாடி ஆர்டிஓ அஜிதா பேகம், தாசில்தார் உமாரம்யா ஆகியோருடன் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் விழாக்குழுவினர் அரசு வகுத்துள்ள விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு விழாவை எவ்வித அசம்பாவிதங்கள் இன்றி நடத்துவோம் என உறுதிமொழி ஏற்றனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளரும் ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி, வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார், திருப்பத்தூர் மாவட்ட பாமக செயலாளர் ராஜா, திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரபு ஆகியோர் கொடியசைத்து விழாவை துவக்கி வைத்தனர்.

இவ்விழாவில் வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஏராளமான காளைகள் பங்கேற்றன. முன்னதாக காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து அனுமதி வழங்கப்பட்டது.

தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த மக்கள் ஆரவாரத்துடன் ஓடுபாதையில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து காளைகள் ஓடின. குறிப்பிட்ட இலக்கை குறைந்த விநாடிகளில் சென்றடைந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முதல் பரிசாக ஓசூர் காளைக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் வழங்கினார். இரண்டாம் பரிசாக ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.71 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.51 ஆயிரம் என 50க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.

முன்னதாக கொத்தக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மேனகா ஜெகதீசன், ஒன்றியக்குழு உறுப்பினர் காயத்ரி பிரபாகரன், ஊர் முக்கியஸ்தர்கள் தலைமை தாங்கினர். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சத்தியவாணி பழனி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கொத்தக்கோட்டை ஊர் பொதுமக்களும், விழாக்குழுவினரும் செய்திருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி ஆய்வு

கொத்தக்கோட்டை கிராமத்தில் நேற்று எருது விடும் விழா விமரிசையாக நடந்தது. எஸ்பி ஸ்ரேயா குப்தா பாதுகாப்பு முன்னேற்பாடுகளை பார்வையிட்டு மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். மேலும், வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமார் மேற்பார்வையில் வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேபி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாடு முட்டி வாலிபர் படுகாயம்

கொத்தக்கோட்டை கிராமத்தில் நேற்று நடந்த விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய மாடு முட்டியதில் ஆம்பூர் சோமலாபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

The post வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை கிராமத்தில் எருது விடும் விழா கோலாகலம் appeared first on Dinakaran.

Read Entire Article